உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் விஞ்ஞானி மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி

Published On 2023-04-19 09:31 GMT   |   Update On 2023-04-19 09:31 GMT
  • பணத்தை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி கொடுக்கவில்லை.
  • விஞ்ஞானி தனசெல்வன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

கோவை,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் தனசெல்வன் (வயது 57). ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவர் தனது மகனை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க விரும்பினார். இதற்காக பல வழிகளில் முயற்சி மேற்கொண்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு தனசெல்வனுக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பிர்தவுஸ், சலாவூதீன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் தனசெல்வத்திடம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் தெரிந்தவர்கள் இருப்பதாகவும், அவர்கள் உதவியுடன் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தரலாம் என கூறினர். மருத்துவ சீட்டுக்கு ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்றனர்.

இதனை உண்மை என நம்பி தனசெல்வன் தனது மகனை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் கேட்ட பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

பணத்தை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் பிர்தவுஸ், சலாவூதின் ஆகியோர் கூறியபடி எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி கொடுக்க வில்லை.

இதனையடுத்து தன செல்வன் 2 பேரையும் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இது குறித்து விஞ்ஞானி தனசெல்வன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக கூறி விஞ்ஞானியிடம் ரூ.20 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த பிர்தவுஸ், சலாவூதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News