உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். அருகில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளனர்.

தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.53.62 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2022-08-20 08:10 GMT   |   Update On 2022-08-20 08:10 GMT
  • பரமக்குடி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.53.62 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.8.11 கோடி செலவில் 20 கிராமங்களில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் கட்டிடங்கள், திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இவற்றின் திறப்பு விழா மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியின் தமிழ்மன்றம் மற்றும் மாணவர் பேரவை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.அமைச்சர் ராஜ–கண்ணப்பன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் கிறிஸ் ஏஞ்சல் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் 6 மாதத்தில் தொடங்கும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.1,978 கோடியாக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியை, மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதற்காக ரூ.53.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ரூ.1,264 கோடியில் கட்டிடம் கட்ட 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அங்கு கட்டிடம் கட்டப்படாததால் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரி இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 37 மாணவர்கள், 13 மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்துவிட்டது. ரூ.1,978 கோடியில் புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

கட்டிடத்திற்கான முழுமையான வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஜைகா நிறுவனம் 82 சதவீதம், அதாவது ரூ.1627.70 கோடி நிதி உதவியும், மத்திய அரசு 18 சதவீதம் நிதியும் தர உள்ளன. கட்டிட வரைபடத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் விடப்பட்டு, 6 மாதத்தில் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடந்தது.

இதில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குநர் அனுமந்தராவ், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, நகரசபை தலைவர்கள் ராமநாதபுரம் கார்மேகம், ராமேசுவரம் நாசர்கான், கீழக்கரை செஹானாஸ் ஆபிதா, பரமக்குடி சேதுகருணாநிதி, ராமநாதபுரம் நகரசபை துணைத்தலைவர் பிரவீன்தங்கம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன் நன்றி கூறினார். மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News