லோக் அதாலத் மூலம் 31 வழக்குகளுக்கு தீர்வு
- ரூ.2 கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்
- வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நேற்று நடைபெற்றது.
மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சுஜாதா, கோபிநாத், அண்ணாதுரை ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில் வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த மோகன் (32), பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சவுந்தரி (26). தம்பதியருக்கு 5வயதில் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி மோகன் மாமண்டூர் - புதூர் சாலையில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மோகனின் மனைவி சவுந்தரி ராணிப்பேட்டை 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரம் இழப்பீட்டு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.37 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கான ஆணையையும் வழங்கினார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் பாண்டியன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 22 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட மொத்தம் 31 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதில் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.