உள்ளூர் செய்திகள்

4 மாதங்களாக ஊதியூரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்- அச்சத்தில் பொதுமக்கள்

Published On 2023-07-11 10:39 GMT   |   Update On 2023-07-11 10:39 GMT
  • மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.
  • இரையை தூக்கி செல்லும் சிறுத்தை அவற்றை வயிறாற தின்று விட்டு குகைக்குள் பதுங்கி கொள்கிறது.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கியிருந்து வருவதுடன், மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.

காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இருந்து வருவதுடன், தொடர்ந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.

சம்பவத்தன்று இரவு அங்குள்ள தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, இரும்பு சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை அலேக்காக தூக்கி சென்றது. பின்னர் காலை ஆட்டுப்பட்டியை பார்க்க சென்ற விவசாயி அங்கு கட்டப்பட்டிருந்த நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சங்கிலிகள் சேதமடைந்தது மற்றும் சிறுத்தையின் கால்தடங்கள் இருந்ததை வைத்து சிறுத்தை நாயை தூக்கி சென்றதை உறுதி செய்தனர்.

4 மாதமாகியும் சிறுத்தை பிடிபடாததால் ஊதியூர் பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கும் நிலை உள்ளது. வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ஊதியூர் மலைப்பகுதி மிகவும் வளம்மிக்கது. மேலும் மலையை சுற்றிலும் அதிக பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்பு காட்டில் மான்கள் அதிக எண்ணிக்கையில் உலா வருகிறது. அதுமட்டுமல்ல மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆட்டுப்பட்டி, மாட்டுப்பட்டி அமைத்து ஆடு, மாடுகளை தோட்டத்து உரிமையாளர்கள் வளர்த்து வருகிறார்கள்.

இந்த மலையில் பதுங்கி உள்ள சிறுத்தை அவ்வப்போது அடிவார பகுதிக்கு வந்து நாய், மாடு மற்றும் ஆடுகளை தூக்கி சென்று விடுகிறது. அதுவும் மலையில் ஆங்காங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு தேவையான தண்ணீர் இருக்கிறது. இரையை தூக்கி செல்லும் சிறுத்தை அவற்றை வயிறாற தின்று விட்டு குகைக்குள் பதுங்கி கொள்கிறது. பின்னர் பசிக்கும்போது கீழே வந்து வேட்டையாடுகிறது. அதனால்தான் அதை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் விரைவில் சிறுத்தையை பிடித்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News