உள்ளூர் செய்திகள் (District)

வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்ட காட்சி.

வீட்டிற்குள் புகுந்தது கரடி இல்லை செந்நாய்

Published On 2023-10-03 08:15 GMT   |   Update On 2023-10-03 08:15 GMT
  • வனத்துறை அதிகாரி தகவல்
  • விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டது.

அப்போது முருகன் வெளியே ஓடி வந்து பார்த்தார். அவர் கரடி ஓடி சென்றதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வன சரகர் குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால் பதித்த தடயங்களை ஆய்வு செய்தனர்.

இந்த தகவல் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது .

பொதுமக்கள் அச்சத்தில் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறி வராமல் முடங்கினர்.

மேலும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதா என வனவர் வெங்கடேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சம்பவம் இடத்திலேயே வீட்டின் பின்புறம் உள்ள ஓடை அருகே இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.

அப்போது கரடி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. மேலும் கரடி வந்ததற்கான தடயங்களும் இல்லை. எனவே கரடி கிராமத்திற்குள் வரவில்லை என வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

வனத்துறையினர் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து வாணியம்பாடி வன சரகர் குமார் கூறியதாவது:-

விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து கரடி நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்துள்ளோம்.

முருகன் வீட்டில் பதிந்த கால் தடயங்களையும் மற்றும் வீட்டில் கிடைத்த முடிகளையும் சேகரித்து ஆய்வு செய்தோம். கரடி வந்து சென்றதற்கான எந்த தடயங்கள் உறுதியாக இல்லை.

கரடியின் முடிகள் திடமாகவும், நீளமாகவும் இருக்கும். ஆனால் சேகரித்த முடிகள் மிகவும் மெல்லியதாக இருந்தது. மேலும் வீட்டிற்கு நுழைந்தது செந்நாய். இதனால் பொது மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News