இந்தியா (National)

திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்திய 'டிஜிட்டல் கேட்வே' செயலியை 10 லட்சம் பக்தர்கள் பதிவிறக்கம்

Published On 2023-02-02 04:07 GMT   |   Update On 2023-02-02 04:07 GMT
  • அந்தச் செயலியால் தேவஸ்தான தகவல்கள், சேவைகளை தெரிந்து கொள்ளலாம்.
  • தரிசன டிக்கெட்டுகள் பெறலாம்.

திருமலை :

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் காணொலி காட்சி மூலம் தேவஸ்தான பிற துறை அதிகாரிகள், துணைக் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 'டிஜிட்டல் கேட்வே' என்ற செல்போன் செயலியை பற்றி அதிக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் மையங்கள், தேவஸ்தான கோவில்களில் அதிகாரிகள் காட்சிப்படுத்த வேண்டும். அந்தச் செயலியை ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

அந்தச் செயலியால் தேவஸ்தான தகவல்கள், சேவைகளை தெரிந்து கொள்ளலாம். தரிசன டிக்கெட்டுகள் பெறலாம். அறைகள் முன்பதிவு செய்யலாம்.

புவனேஸ்வரம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவிலில் புதிய சேவைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவஸ்தான சேவைகள், பிற தகவல்களை அந்தந்தக் கோவிலில் காட்சிப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வரம் கோவிலின் வளர்ச்சிக்கு உள்ளூர் ஆலோசனைக் குழுவிடம் அவ்வப்போது ஆலோசனைகள் பெற வேண்டும். பல்வேறு ஊர்களில் நிலுவையில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபப் பணிகளை விரைந்து முடித்து பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

உபமாகா கோவிலில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடக்க இருந்த சீனிவாச கல்யாண உற்சவம் இம்மாதம் நடத்தப்படும். கோவிலுக்கு பக்தர்களின் வருகையை அதிகரிக்க போக்குவரத்து வசதி செய்து தர அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலின் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பதி கபிலேஸ்வரர் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், தொண்டமாநாடு வெங்கடேஸ்வரர் கோவில்களில் பிரம்மோற்சவ விழா விரைவில் நடத்தப்படும்.

பிரம்மோற்சவ விழா தொடர்பான விவர அறிக்கைக்கும், டெண்டர்களுக்கும் முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் கோபூஜைக்கு பசு, கன்றுக்குட்டிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை அதிகாரிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News