செய்திகள்

ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் கோர விபத்து- சுற்றுலா சென்ற 7 பேர் பலி

Published On 2018-06-11 03:27 GMT   |   Update On 2018-06-11 05:04 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்களும், ஆசிரியர் ஒருவர் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #accident
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவுக்கும் லக்னோவுக்கும் இடையே அதிவேக நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சமீப காலங்களில் இந்த சாலைகளில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரண்டு பேருந்துகளின் மூலம் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து எரிபொருள் இன்றி நின்று போனது.

இதனால் பேருந்தில் இருந்த மாணவர்கள், மற்றொரு பேருந்தில் இருந்து சிறிது எரிபொருள் எடுத்து அதன் மூலம் பெட்ரோல் பங்க் வரை செல்ல திட்டமிட்டு, பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.

அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த பேருந்து, மாணவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சிகிச்சை பலனளிக்காமல் ஆசிரியரும் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற பேருந்தையும், ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புனித தலத்துக்கு கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்,  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.  #accident
Tags:    

Similar News