செய்திகள்

சிபிஐ மோதல் விவகாரம் கண்டித்து காங்கிரஸ் சார்பில் 26ம் தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2018-10-24 20:12 GMT   |   Update On 2018-10-24 20:12 GMT
சிபிஐயில் ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தை கண்டிக்கும் வகையில் அனைத்து மாநில தலைநகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன் காங்கிரஸ் சார்பில் 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. #CBI #RakeshAsthana #Congress
புதுடெல்லி:

சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது.
 
மொயின் குரேஷி மீதான வழக்கை விசாரித்து வந்த ராகேஷ் அஸ்தானா, இவ்வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி பெற்றதாக புகார் அளித்தார். அதன்பின்னர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. 



இவ்வாறு மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இரண்டு இயக்குனர்களும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது. தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுள்ளார். வழக்கை விசாரித்த முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை விசாரிக்கும் புதிய குழுவை சிபிஐ அறிவித்துள்ளது. டிஐஜி தருண் கவுபா, எஸ்பி சதீஷ் தாகர், இணை இயக்குனர் வி.முருகேசன் ஆகியோர் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஐயில் ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தை கண்டிக்கும் வகையில் அனைத்து மாநில தலைநகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன் காங்கிரஸ் சார்பில் 26-ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவித்துள்ளது. #CBI #RakeshAsthana #Congress
Tags:    

Similar News