செய்திகள் (Tamil News)

பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்- 2 கருத்து கணிப்புகளில் தகவல்

Published On 2019-03-11 09:41 GMT   |   Update On 2019-03-11 09:41 GMT
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என்று சிவோட்டர் மற்றும் இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. #BJP #SurveyPoll
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று சிவோட்டர் நிறுவனமும், இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை தனித்தனியாக நடத்தின.

இந்த 2 கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த 2 முடிவுகளிலும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது.

சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ள முடிவுகள் வருமாறு:-

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 264 தொகுதிகள் வெற்றி பெறும். பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 220 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 141 இடங்களே கிடைக்கும். இதில் காங்கிரசுக்கு மட்டும் 86 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

பா.ஜனதா, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தவிர மாநில கட்சிகளுக்கும் அதிகளவு தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாநில கட்சிகளுக்கு 138 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும்.

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஓரளவு வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிதான் பாரதிய ஜனதாவின் தனி பெருமபான்மையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு 29 இடங்களே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா 71 இடங்களை கைப்பற்றி இருந்தது. அங்கு முன்பு போல பா.ஜனதா வெற்றி பெற்றால் 300 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று விடும்.

பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பலமான 272 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை. பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதால் சில மாநில கட்சிகள் பா.ஜனதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் நாடு முழுவதும் பா.ஜனதா கூட்டணிக்கு 31.1 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 30.9 சதவீதம், மாநில கட்சிகளுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான தேர்தல் உடன்பாடு ஏற்படாததால் அந்த கட்சி கணிசமான தொகுதிகளில் தோல்வி அடையும் நிலையில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு பீகாரில் 36, குஜராத்தில் 26, கர்நாடகாவில் 16, மத்திய பிரதேசத்தில் 24, மராட்டியத்தில் 36, ஒடிசாவில் 12, ராஜஸ்தானில் 20 தொகுதி களில் வெற்றி வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

இவ்வாறு சிவோட்டர் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா டி.வி.டி.என். எக்ஸ் நடத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்து இருப்பதாவது:-

பாரதிய ஜனதா கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேரதலில் 238 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 82 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் பெறும் இடங்களை கருத்தில் கொண்டு அந்த கூட்டணிக்கு 285 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கிடைத்தால் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சமாக 126 இடங்கள் பெறவே வாய்ப்புள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். சமாஜ்வாடி கட்சிக்கு 18 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது.

உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி காரணமாக பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும். என்றாலும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வெற்றிகள் பா.ஜனதாவின் உத்தபிரதேச இழப்பை ஈடு செய்யும் வகையில் இருக்கும்.

இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP #SurveyPoll
Tags:    

Similar News