செய்திகள்

கேரளாவில் அடுத்தடுத்து பிரதமர் மோடி-ராகுல் போட்டி பிரசாரம்

Published On 2019-04-11 06:22 GMT   |   Update On 2019-04-11 06:22 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு போட்டியாக பிரதமர் மோடியும் கேரளாவில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக நாளை அவர் கேரளா வருகிறார். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
திருவனந்தபுரம்:

கேரளாவில் வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். கடந்த 4-ந்தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மனுத்தாக்கல் முடிந்ததும் வயநாட்டில் பிரசாரத்தையும் தொடங்கினார். இதில் ராகுல்காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். ராகுல்காந்தி நடத்திய ரோடு ஷோவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி மீண்டும் கேரளாவில் பிரசாரத்திற்கு வருவேன் என்று கூறினார்.

ராகுல்காந்தி கூறியபடி வருகிற 16-ந்தேதி அவர் கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட பத்னாபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கொல்லம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகிறார்கள். பத்னாபுரம் செயின்ட் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடந்தது. அந்த மைதானத்தை ராகுல் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகளும் பார்வையிட்டு சென்றனர்.

இதையடுத்து கொல்லம் மாவட்ட காங்கிரசார், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டனர்.

கொல்லம் மாவட்ட தேர்தல் அதிகாரி செயின்ட் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்று கூறி விட்டார்.

செயின்ட் ஸ்டீபன் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகளும் இப்பள்ளியில் உள்ளது. எனவே இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்ததற்கு மாவட்ட காங்கிரசார் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட தலைவர் பிந்துகிருஷ்ணா கூறும்போது, பத்னாபுரம் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு, தேர்தல் கமி‌ஷனுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது வேண்டும் என்றே அனுமதி மறுக்கிறார்கள். அதை ஏற்க முடியாது.

ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி போராட்டத்தில் ஈடுபடுவோம். இது எங்கள் ஜனநாயக உரிமை. அதனை பெற்றே தீருவோம் என்று கூறினார்.

இதற்கிடையே கொல்லம் மாவட்ட தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர். பாதுகாப்பு அதிகாரிகள் மைதானத்தை ஏற்கனவே ஆய்வு செய்து விட்டதால் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வருகிற 16-ந்தேதி ராகுல்காந்தி பத்னாபுரம் ஸ்டீபன் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அதன்பிறகு மீண்டும் அவர் வயநாடு தொகுதியிலும் பிரசாரம் செய்வார் என மாநில காங்கிரசார் தெரிவித்தனர்.

ராகுல்காந்திக்கு போட்டியாக பிரதமர் மோடியும் கேரளாவில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் நாளை கேரளா வருகிறார். கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வரும் அவர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

அதன்பிறகு 18-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் ரோடு ஷோவிலும் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கோழிக்கோடு வயநாடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.



பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi

Tags:    

Similar News