செய்திகள்
கோப்புப்படம்

இடைத்தேர்தல்: இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சறுக்கல்

Published On 2021-11-02 10:23 GMT   |   Update On 2021-11-02 12:43 GMT
இமாச்சல பிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி மூன்று தொதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் காலியாக இருந்த 3 பாராளுமன்ற தொகுதிகள், 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 30-ந்தேதி நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இமாச்சல பிரதேசத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளுங்கட்சியான பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மூன்று சட்டசபை தொகுதிகள், ஒரு பாராளுமன்ற தொகுதியில் முன்னணி பெற்று வந்தது.

ஆர்கி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் முன்னணி பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். அதேபோல் ஃபத்தேஹ்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் முன்னணி பெற்றுள்ளார்.

ஜுப்பால்-கோதை  தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 27 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னணி உள்ளார். இந்த மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது. அதேபோல் மந்தி பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி முகத்தில் உள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது 68 இடங்களில் பா.ஜனதா 43 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் கிடைத்தன. தற்போது இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சறுக்கல் எனக் கருதப்படுகிறது.
Tags:    

Similar News