இந்தியா (National)

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த 60 வயது முதியவர் கைது

Published On 2023-04-28 09:06 GMT   |   Update On 2023-04-28 09:53 GMT
  • ஐசிலால் ஜாம் நேற்று ரெயில் மூலம் வெளியூருக்கு தப்பி செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.

இந்த யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழையும்போது அவரை வெடிகுண்டு வைத்து கொன்று விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு ராகுல் காந்தி வரும்போது இந்த சம்பவம் நடக்கும் என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம் இந்தூரில் உள்ள ஒரு இனிப்பு கடை அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடிதத்தை எழுதியவர் யார்? என்பது பற்றியும் அவரை கண்டு பிடித்து கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தது தயாசிங் என்ற ஐசிலால் ஜாம் என தெரியவந்தது. 60 வயதான அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில் தயாசிங் என்ற ஐசிலால் ஜாம் நேற்று ரெயில் மூலம் வெளியூருக்கு தப்பி செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ரெயில் நிலையம் சென்ற போலீசார் அங்கு தயாசிங் என்ற ஐசிலால் ஜாமை கைது செய்தனர்.

கைதான தயாசிங் என்ற ஐசிலால் ஜாம் இந்தூர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் துணை கமிஷனர் நிமிஷ் அகர்வால் கூறும்போது, கைதான தயாசிங் என்ற ஐசிலால் ஜாம் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். 

Tags:    

Similar News