இந்தியா

அஜித்பவார் பா.ஜனதாவில் இணைந்தால் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம்: சிவசேனா அறிவிப்பு

Published On 2023-04-20 02:49 GMT   |   Update On 2023-04-20 04:15 GMT
  • தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி.
  • அஜித்பவார், உத்தவ் தாக்கரேவின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.

மும்பை :

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவலை அஜித்பவார் மறுத்து வருகிறார்.

இந்தநிலையில் அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்தால், கூட்டணி அரசில் இருந்து விலகுவோம் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாட் கூறியதாவது:-

அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனா மற்றும் பா.ஜனதாவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் அவரை வரவேற்போம். அதே நேரத்தில் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அல்லது கட்சியின் ஒரு அணியாக (எம்.எல்.ஏ.க்களுடன்) சேர்ந்தால் அது தவறு. அப்படி நடந்தால் நாங்கள் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம். எங்கள் கொள்கை தெளிவானது. தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி. ஆட்சி அதிகாரத்தில் கூட தேசியவாத காங்கிரசுடன் இருக்க மாட்டோம். பா.ஜனதா, தேசியவாத காங்கிரசை சேர்த்தால் மராட்டியம் அதை விரும்பாது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்தது பிடிக்கவில்லை என்பதால் தான் நாங்கள் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

முன்பு சிவசேனாவில் நிலவி வந்தது போல தற்போது தேசியவாத காங்கிரசில் குழப்பம் நிலவி வருகிறது. அஜித்பவார், உத்தவ் தாக்கரேவின் தலைமையை (மகா விகாஸ் கூட்டணி அரசில்) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேசியவாத காங்கிரசில் நீடிக்கவும் விரும்பவில்லை. அங்கு அவர் சுதந்திரமாக இல்லை என நினைக்கிறேன். அஜித்பவாருக்கு அவரது கட்சி மீதுள்ள அதிருப்திக்கும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சிவசேனா வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அஜித் பவாரின் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே செல்வது புதிதல்ல. அஜித்பவாரின் மகன் பார்த் பவார் தேர்தலில் தோல்வியை சந்தித்ததில் இருந்து அவர் கட்சி மீது அதிருப்தியில் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News