இந்தியா

பா.ஜனதா, காங்கிரஸ் இரண்டும் ஊழல் கட்சிகள்: குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2023-05-08 03:03 GMT   |   Update On 2023-05-08 03:03 GMT
  • துமகூரு மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன.
  • கட்சி தொண்டர்களே என்னுடைய சொத்து.

துமகூரு :

ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துமகூரு மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்த போது பேசியதாவது:-

துமகூரு மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. அதில், 10 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெறுவது உறுதி. 2 தேசிய கட்சிகளும், நமது கட்சி மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஓட்டுப்போட்டால் காங்கிரசுக்கு போடுவது என்று பா.ஜனதா தலைவர்களும், நமது கட்சிக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக ஆகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, பல மாநில முதல்-மந்திரிகள் வருகிறார்கள். காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் தலைவர்கள் வருகிறார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பிரசாரம் செய்ய யாரும் தேவையில்லை. எங்கள் கட்சி தொண்டர்களே போதும், அவர்களே நட்சத்திர பேச்சாளர்கள் ஆவார்கள்.

பா.ஜனதா, காங்கிரசும் ஊழல் கட்சிகள். ஜனதாதளம்(எஸ்) தான் விவசாயிகள், ஏழைகளுக்கான கட்சியாகும். துமகூரு புறநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். தேர்தலுக்கு முன்பாக வரும் கருத்து கணிப்பு முடிவுகளை நமது கட்சியினர் யாரும் நம்ப வேண்டாம். இந்த முறை நமது கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி.

நான் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கவலைப்பட தேவையில்லை. கட்சி தொண்டர்களே என்னுடைய சொத்து. தேசிய கட்சிகளால் கர்நாடகத்திற்கு எந்த பயனும் இல்லை. இதனை மாநில மக்கள் புரிந்து கொண்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியை நிச்சயமாக ஆதரிப்பார்கள்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Tags:    

Similar News