இந்தியா

கோலாரில் சித்தராமையாவை காங்கிரசாரே தோற்கடிப்பார்கள்: குமாரசாமி

Published On 2022-11-16 03:46 GMT   |   Update On 2022-11-16 03:46 GMT
  • பா.ஜனதாவினரை போல் நாங்கள் தரம் தாழ்ந்து பேச மாட்டோம்.
  • சித்தராமையாவை நாங்கள் தோற்கடிக்க வேண்டியது இல்லை.

பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தோற்கடிக்க அந்த தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்று சிலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அந்த கட்சியுடன் நாங்கள் எந்த விதமான ரகசிய கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை.

அது தொடர்பாக நாங்கள் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. சித்தராயைா கோலார் உள்பட எங்கு போட்டியிட்டாலும் சரி, அவருக்கு எதிராக நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட மாட்டோம். பா.ஜனதாவினரை போல் நாங்கள் தரம் தாழ்ந்து பேச மாட்டோம். நாங்கள் என்ன செய்தாலும், வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் தான்.

கோலாரை பொறுத்தவரையில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஜனதா தளம் (எஸ்) சார்பில் யாரை நிறுத்துவது என்பதை நாங்கள் முடிவு செய்தோம். சித்தராமையாவுக்கு எதிராக போட்டியிட எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர். சித்தராமையாவை நாங்கள் தோற்கடிக்க வேண்டியது இல்லை. கோலாரில் காங்கிரஸ் கட்சியினரே அவரை தோற்கடிப்பார்கள். வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து எங்கள் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.

பா.ஜனதாவினர் பள்ளி கட்டிடங்களுக்கு காவி நிறத்தை பூச திட்டமிட்டுள்ளனர். இதனால் கற்றலின் முக்கியத்துவம் போய்விடும். மைசூருவில் பஸ் நிறுத்தம், மசூதி போல் கட்டப்பட்டுள்ளதை இடிப்பதாக பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார். அவர்களுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டி பழக்கமில்லை. இடித்து தான் பழக்கம். மக்களுக்கு நிழல் கொடுப்பது தான் முக்கியம். நிழல் கொடுக்க பஸ் நிறுத்த நிழற்குடை எப்படி இருந்தால் என்ன?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

Similar News