இந்தியா

தேர்தல் பத்திரங்கள்: நிதி எங்கிருந்து வருகிறது என கேட்க மக்களுக்கு உரிமை இல்லை- நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Published On 2023-10-30 07:40 GMT   |   Update On 2023-10-31 03:24 GMT
  • தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
  • வேட்பாளர்கள் விவரங்களை வாக்காளர்கள் கேட்கும் உரிமை போன்று இதில் கோர முடியாது

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் ஒரு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களை பெறலாம். இந்த பத்திரங்களை கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கலாம். இதை எந்தவித கட்டுப்பாடும் இன்றி அரசியல் கட்சி நிதியாக மாற்றிக்கொள்ளலாம். இந்த பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது மற்றவர்களுக்கு தெரியாது.

இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதத்தை நேற்று உச்சநீதிமன்றத்தில், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல் எதையும் மற்றும் அனைத்தையும் அறிய பொதுவான உரிமை இருக்க முடியாது. குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் விவரங்களை வாக்காளர்கள் கேட்கும் உரிமை என உச்சநீதிமன்றம் 2020-ல் உறுதிப்படுத்தியது, கட்சி பெறும் நிதி விவரங்களை கோரும் உரிமையாக கருத முடியாது.

குறிப்பிட தகுந்த காரணங்கள் இன்றி, பொதுவாக அனைத்து விவரங்களை கேட்கும் உரிமை கிடையாது. பொதுமக்களின் உரிமை பாதிக்கப்படாத வகையில், எல்லா தரவுகளையும் வழங்க வேண்டியது அவசியம் இல்லை. நீதிமன்றத்தின் வரம்பிற்குள் இந்த விவகாரம் அடங்காது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News