மக்களின் கவனத்தை திசைதிருப்ப வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்: டெல்லி பொதுக்கூட்டத்தில் ராகுல் ஆவேசம்
- ஒரே மாதத்தில் உண்மையை நாட்டுக்கு காட்டியிருப்பதாக ராகுல் காந்தி பேச்சு
- நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் நண்பர்களுக்கு விற்றுவிடுவார்கள்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
எனது யாத்திரைக்கு தேவையான சக்திய மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ளீர்கள். சிலர் எல்லா இடங்களிலும் மத வெறுப்புணர்ச்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். யாத்திரையை தொடங்கியபோது நாட்டில் நிலவும் வெறுப்புணர்ச்சியை நீக்க நினைத்தேன்.
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து வந்துள்ளேன். நாட்டில் எங்கும் வன்முறையையோ வெறுப்பையோ பார்த்ததில்லை. நான் தொலைக்காட்சியை ஆன் செய்தால் நான் வன்முறையை பார்க்கிறேன். ஊடகங்களை கட்டுப்படுத்தும் சக்திகளின் தூண்டுதலின் பேரில் எப்போதும் தொலைக்காட்சியில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் எனது இமேஜை அழிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. ஆனால், நான் ஒரே மாதத்தில் உண்மையை நாட்டுக்கு காட்டியிருக்கிறேன்.
உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக 24 மணி நேரமும் இந்து-முஸ்லிம் பெயரில் வெறுப்பு பரப்பப்படுகிறது. 24 மணி நேரமும் இந்து-முஸ்லிம் என பேசிவிட்டு, உங்கள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் நண்பர்களுக்கு விற்றுவிடுவார்கள். அவர்கள் உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பார்கள். இது நரேந்திர மோடியின் அரசு அல்ல, அம்பானி-அதானியின் அரசாங்கம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.