இந்தியா

எப்படி இந்த மாதிரி பண்ணுவீங்க? அமலாக்க துறையை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்!

Published On 2023-05-03 11:29 GMT   |   Update On 2023-05-03 11:29 GMT
  • குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு இருந்தது.
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் போது, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் பெயரை குற்றப்பத்திரிக்கையில் தவறுதலாக சேர்த்திருப்பதே, இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான ஒன்று தான் என்று வெளிப்படையாக தெரிகிறது என்றார்.

 

"அது எப்படி ஒருவரின் பெயரை குற்றப்பத்திரிக்கையில் தவறுதலாக சேர்த்திருக்க முடியும்? இதில் இருந்தே இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான ஒன்று என்பது தெளிவாகிறது. நாட்டிலேயே மிகவும் நேர்மையான கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே பிரதமர் இவ்வாறு செய்கிறார். நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல் கட்சியை கேவலமான அரசியல் செய்து பிரதமர் தடுக்க நினைக்கிறார். இது அவர் செய்க்கூடிய காரியம் இல்லை," என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.

"வரலாற்றிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை இவ்வாறு செய்திருக்கிறது. குற்றப்பத்திரிக்கையில் என் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது," என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதுமட்டுமின்றி தன்மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், உண்மையற்ற, அவதூறான தகவல்களை தெரிவித்த அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா மற்றும் உதவி இயக்குனர் ஜோகேந்தர் சிங் ஆகியோர் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி மத்திய நிதித்துறை செயலாளருக்கு சஞ்சய் சிங் கடிதம் எழுதியிருந்தார்.

Tags:    

Similar News