இந்தியா (National)

அரியானா தேர்தல் வெற்றிக்கு பின் டிரெண்டாகும் 'ஜிலேபி'.. ராகுல் காந்தியை பங்கமாக கலாய்க்கும் பாஜக

Published On 2024-10-09 02:40 GMT   |   Update On 2024-10-09 02:40 GMT
  • பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
  • பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று மோடி கிண்டலடித்தார்.

அரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்றய தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பாதியிலேயே பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது.

தற்போது பாஜக தனது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இனிப்பு பலகாரமான ஜிலேபி டிரண்ட் ஆகி வருகிறது. பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜிலேபியை குறிப்பிட்டு அவர்கள் தேர்ந்தெடுக்க காங்கிரசை வெறுப்பேற்றும் அரசியல் காரணங்களும் உண்டு.

 

தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரியானாவில் பிரதியேகமாக தயாரிக்கப்படும் மாதுராம் ஜிலேபி குறித்து பேசியிருந்தார். பிரசித்தி பெற்ற மாதுராம் ஜிலேபிகளை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதால் அரியானாவில் வேலைவாய்ப்பு உயரும் என்ற திட்டத்தைத் தேர்தல் பிரசாரங்களில் ராகுல் முன்வைத்திருந்தார்.

மற்ற ஜிலேபிகளை விட சற்று அதிக நாட்கள் நீடிக்கக்கூடிய இந்த மாதுராம் ஜிலேபிகளின் தயாரிப்பை அதிகப்படுத்தும்போது நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 50,000 வரை மாதுராம் கிளைகளில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியும் என்று அவர் பேசினார். இதைக் கிண்டல் செய்த பாஜக தலைவர்கள், எங்களுக்கும் மாதுராம் ஜிலேபிகள் பிடிக்கும், ஆனால் ராகுல் காந்தி இதுபற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என்று கூறியிருந்தனர்.

பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியா கூட்டணி வருடத்துக்கு ஒரு பிரதமர் என பிரித்து 5 வருடங்கள் ஆட்சி செய்யும் கனவில் உள்ளது, பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று கிண்டலடித்திருந்தார்.

தற்போது காங்கிரசை வீழ்த்தி பாஜக வென்றுள்ளதால் அம்மாநிலத்தில் ஜிலேபிகளை பாஜவினர் டிரண்ட் செய்து வருகின்றனர். அசாமில் பாஜக ஊழியர் ஒருவர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்று ஜிலேபி பெட்டிகளை டெலிவரி செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 

Tags:    

Similar News