இந்தியா (National)

சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய ஜூனியர் டாக்டர்கள்

Published On 2024-10-05 21:15 GMT   |   Update On 2024-10-05 21:15 GMT
  • தங்கள் கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
  • இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கியது.

பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, டாக்டர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார்.

டாக்டர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக்கொண்டபடி செயல்படுத்தவில்லை எனக்கூறி ஜூனியர் டாக்டர்கள் கடந்த 1-ம் தேதி மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். அப்போது தங்கள் கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் அரசிடமிருந்து எந்த பதிலும் வரைவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜூனியர் டாக்டர்கள் நேற்று நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், டாக்டர்களின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்குவங்க அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News