சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக புனே கோர்ட் சம்மன்
- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திமீது சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக் கூடியது என்றார்.
மும்பை:
சாவர்க்கர் குறித்தும், இந்துத்துவ கொள்கை குறித்தும் அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திமீது சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த ஆண்டு இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
அந்த மனுவில், கடந்த 2023-ல் லண்டனில் பேசிய ராகுல் காந்தி சாவர்க்கர் எழுதிய புத்தகம் ஒன்றில் தானும், தனது நண்பர்களும் முஸ்லிம் நபர் ஒருவரை அடித்தோம். அதனால் மகிழ்ச்சியாக உணர்ந்தோம் என எழுதியிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. சாவர்க்கர் எங்கேயும் அப்படி ஒரு விஷயத்தை எழுதவில்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக் கூடியது என தெரிவித்திருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி புனே சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.