இந்தியா

அரசு மருத்துவமனை தரையில் படுத்து தூங்கியிருக்கிறேன்.. தலைமை நீதிபதி சந்திரசூட்

Published On 2024-08-22 13:31 GMT   |   Update On 2024-08-22 13:31 GMT
  • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
  • போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்தது. இன்றைய விசாறணையின் போது வழக்கு தொடர்பாக கொல்கட்டா காவல் துறை மற்றும் சிபிஐ சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை துவங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை."

"பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News