பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு மத்திய மந்திரி ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டது
- கடந்த 2-ந்தேதி சுகாதார மற்றும் குடும்பநலத்துறை மந்திரி அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்குர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "6 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நாப்கின்கள் வழங்க வேண்டும். அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உறைவிட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, "நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் உள்பட 97.5 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. டெல்லி, கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் (100%) மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும், கேரளாவில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன" என்று தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கட்கிழமை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வகுத்துள்ளது. அந்த கொள்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கடந்த கடந்த 2-ந்தேதி ஒப்புதல் அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.