இந்தியா

ஜி20 உச்சி மாநாட்டிற்காக டெல்லியை அழகுப்படுத்த வீடுகள் இடிக்கப்படவில்லை- மத்திய அரசு பதில்

Published On 2023-07-24 18:29 GMT   |   Update On 2023-07-24 18:29 GMT
  • டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
  • ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை அகற்றுவது தொடர் நடவடிக்கையாகும்.

ஜி20 மாநாட்டிற்காக நகரை அழகுபடுத்துவதற்காக டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) எந்த வீடும் இடிக்கப்படவில்லை என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தலைநகரில் ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், மத ஸ்தலங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

ராஷ்டிரிய ஜனதா தள மாநிலங்களவை எம்பி மனோஜ் குமார் ஜா கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதில், "ஜி20 மாநாட்டிற்காக நகரை அழகுபடுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் எந்த வீடும் இடிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், அரசு அல்லது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை அகற்றுவது தொடர் நடவடிக்கையாகும்.

டெல்லி 2021க்கான மாஸ்டர் பிளான் மற்றும் டெல்லிக்கான ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் விதிகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிட, டிடிஏ துணைத் தலைவரின் தலைமையில் ஒரு சிறப்பு பணிக்குழு ஏப்ரல் 25, 2018 அன்று அமைக்கப்பட்டது.

சிறப்பு பணிக்குழுவினர் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் கட்டிட விதிகளை மீறுதல் பற்றிய புகார்களை கண்டறிகிறது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த விஷயத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஜி-20 உச்சி மாநாட்டிற்காக நடந்து வரும் சாலைகள், பூங்காக்கள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளை முடிக்க ஏஜென்சிகளுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லி அரசு காலக்கெடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News