இந்தியா

ஜம்மு காஷ்மீர் தேர்தல்- மீண்டும் சிறப்பு அந்தஸ்து உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அளித்த ராகுல் காந்தி

Published On 2024-09-24 03:19 GMT   |   Update On 2024-09-24 03:19 GMT
  • காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் வெறுப்பை பரப்புவதிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றன.

காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 18-ந்தேதி முடிந்த நிலையில், 2-வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அந்த தொகுதிகளில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரங்களை மேற்கொண்டனர். அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் தொகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆசி அமைத்தால், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும். குடும்ப தலைவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை, சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

குடும்ப ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அமல்படுத்தப்படும். ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஆம்புலன்ஸ் மற்றும் மொபைல் கிளினிக் தொடங்கப்படும். காஷ்மீர் பண்டிட்களுக்கான மன்மோகன் சிங் திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் காலியாக உள்ள 1 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒவ்வொரு நபருக்கும் 11 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்தார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின், மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் எந்த மாநிலமும் இப்படி யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்படவில்லை. ஆனால் முதல் முறையாக காஷ்மீருக்கு அது நேர்ந்திருக்கிறது.

எனவே காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அவர்கள் அதைச் செய்யத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே தேர்தலுக்குப்பிறகு இதற்காக மோடி அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் வெறுப்பை பரப்புவதிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றன. அதனால்தான் காஷ்மீரிலும், நாட்டிலும் அதை செய்கிறார்கள்.

எல்லா இடத்திலும் அவர்கள் வெறுப்பை பரப்புகிறார்கள். நாடு முழுவதும் பா.ஜனதாவின் வெறுப்பு சந்தையில் நாங்கள் அன்புக்கடையை திறந்து வருகிறோம். இது ஒரு சித்தாந்தப்போர்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா வரையிலும் பயணம் செய்து, வெறுப்பை விட அன்பே மட்டுமே உதவும் என்ற செய்தியை பரப்பினேன்.

செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் பிரிவினை அரசியலை செய்கிறார்கள். அதைப்போலவே ரஜோரி-பூஞ்ச் பகுதியில குஜ்ஜார் மற்றும் பகரிகளை பிரித்தார்கள். ஆனால் அவர்களின் இந்த செயல்திட்டத்தை வெற்றிபெற விடமாட்டோம். எல்லாரையும் இணைத்து செயல்படுவோம். தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு வேட்பாளர்களை ஆதரித்து எங்களை வெற்றிபெறச்செய்யுங்கள். உங்களை கைவிடமாட்டோம். காஷ்மீர் மக்களுக்கு எது தேவையோ, அதற்காக பாராளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். எப்போதும் உங்களுடன் இருப்பேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Tags:    

Similar News