இந்தியா

நான் நெருப்புடா - அஜித் பவாருக்கு மீண்டும் பதிலடி கொடுத்த சரத் பவார்

Published On 2023-07-08 11:25 GMT   |   Update On 2023-07-08 11:25 GMT
  • சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அஜித் பவார் பேசினார்.
  • நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என சரத் பவார் தெரிவித்தார்.

மும்பை:

மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் சமீபத்தில் தனித்தனியாக நடைபெற்றன.

அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அஜித் பவார் பேசுகையில், சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்சிபியின் ஆட்சியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். பா.ஜ.க. தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உதாரணமாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உள்ளனர். இது புதிய தலைமுறையை உயர்த்த அனுமதிக்கிறது. உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. நெருப்பு போல் வேலை செய்து வருகிறேன்.

மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார்?

நான் பிரதமர் ஆகவோ, மந்திரி ஆகவோ ஆசைப்படவில்லை.

நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.

அனைத்து கிளர்ச்சியாளர்களும் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

சுப்ரியா சுலே அரசியலுக்கு வரவேண்டும் என கட்சியினர் விரும்பினர், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பிரபுல் படேலுக்கு 10 ஆண்டுகள் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தோம். மக்களவை தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததால் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News