2000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு சந்திரபாபு நாயுடு வரவேற்பு
- 2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்.
- அனைத்துப் பொருட்களின் விலைகளும், கியாஸ் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
திருப்பதி:
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவை ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரவேற்றுள்ளார்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஊழல், பதுக்கல் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு மூல காரணமான அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன்.
இது பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், மக்களின் பெரிய நன்மைக்காக நேர்மையுடன் உழைக்கும் நேர்மையான நபர்களின் முயற்சிகளுக்கு மிகப்பெரிய மதிப்பையும் சேர்க்கும்.
இந்த நடவடிக்கை வாக்காளர்களிடையே பணப் பட்டுவாடாவை பெரிய அளவில் தடுக்க உதவும்.
2,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் முடிவு நிச்சயமாக நல்ல அறிகுறி. நான் நீண்ட காலத்திற்கு முன்பே டிஜிட்டல் கரன்சி குறித்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தேன்,
2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர். இதில் ரூ.2000 நோட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பணப் பைத்தியம் அவர் மாநிலம் முழுவதையும் கொள்ளையடிக்கத் துடிக்கிறார். பணத்திற்காக யாரையும் கொல்ல அவர் தயாராக இருக்கிறார்.
அனைத்துப் பொருட்களின் விலைகளும், கியாஸ் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இதற்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால், அத்தகைய நபர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.