இந்தியா (National)

பட்ஜெட்டில் நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் இருக்காது- நிர்மலா சீதாராமன்

Published On 2023-01-17 09:04 GMT   |   Update On 2023-01-17 09:04 GMT
  • 2020-21-ல் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும்.
  • அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது.

புதுடெல்லி:

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:-

நானும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். எனவே, அவர்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் எனக்கும் தெரியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் எந்த புதிய வரியையும் விதித்தது இல்லை. நடுத்தர மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது. அது இனியும் தொடரும் என்றார்.

இதன் மூலம் நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் எதுவும் பட்ஜெட்டில் இருக்காது என்பதை அவர் சூசகமாக தெரிவித்தார். எனினும், வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பது தொடர்பாக அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், '100 பொலிவுரு நகரங்களையும், 27 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை ஏற்படுத்தவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவை திறம்பட செயல்பட முடியும். மேலும், அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.

2020-21-ல் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும். இதுவே அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது. கொரோனா தொற்று பிரச்சினைக்கு நடுவில் இந்த வளர்ச்சி ஏற்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும். வங்கிகளின் வாராக் கடன் அளவும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது' என்றார்.

விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன்பு மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News