இந்தியா

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியை தொடங்குவேன்: நிதிஷ்குமார்

Published On 2023-01-06 04:14 GMT   |   Update On 2023-01-06 04:14 GMT
  • நிதிஷ்குமார் ‘சமாதான யாத்திரை’ என்ற யாத்திரையை தொடங்கினார்.
  • இந்த யாத்திரை, பிப்ரவரி மாதம்வரை நடக்கும்.

பாட்னா :

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி நடந்து வருகிறது.

பா.ஜனதா கூட்டணியில் இருந்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் அதில் இருந்து விலகி, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கைகோர்த்தார்.

பின்னர், செப்டம்பர் மாதம் டெல்லி சென்று, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து கூறினார். காங்கிரசின் பாதயாத்திரை முடிந்த பிறகு அதுபற்றி முடிவு செய்வதாக சோனியாகாந்தி உறுதி அளித்தார்.

இந்தநிலையில், நிதிஷ்குமார் 'சமாதான யாத்திரை' என்ற யாத்திரையை நேற்று தொடங்கினார். அப்போது அவரிடம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு நிதிஷ்குமார் கூறியதாவது:-

எனது அரசு தொடங்கிய வளர்ச்சி திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்வதில்தான் இப்போது மிகவும் அக்கறையாக இருக்கிறேன். மாநிலம் முழுவதும் பயணம் செய்யப்போகிறேன்.

வளர்ச்சி திட்டங்கள் முடிவடைந்து இருந்தால், மகிழ்ச்சி அடைவேன். முடிவடையாவிட்டால், அவற்றை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவேன்.

இந்த யாத்திரை, பிப்ரவரி மாதம்வரை நடக்கும். அதன்பிறகு பீகார் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். மார்ச் மாத இறுதிவரை கூட்டத்தொடர் நடக்கும்.

அதைத்தொடர்ந்து, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான வாய்ப்புகளை கவனிப்பேன். அந்த பணியை புதிதாக மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News