இந்தியா

பாஜகவின் எண்ணங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளனர்- ப.சிதம்பரம்

Published On 2024-06-25 03:02 GMT   |   Update On 2024-06-25 03:02 GMT
  • 50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள்.
  • எந்த ஒரு மனிதரும், ஆட்சியாளரும் அரசியல் அமைப்பின் கட்டமைப்பை மாற்றக்கூடாது என மக்கள் கூறியுள்ளனர்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 50 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் -எமர்ஜென்சியை சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்திய ஜனநாயகத்தில் ஒரு இருண்ட அத்தியாயம் எழுதப்பட்டதுடன் 50-ம் ஆண்டு நாளை (இன்று) தொடங்குகின்றது. அரசியலமைப்புச் சட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டு, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்டதை இந்தியாவின் புதிய தலைமுறை மறந்துவிடக் கூடாது என கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். நாங்கள் மக்களுக்காக, மக்களவையிலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் (கோஷம்) எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்" என்று பதிலடி தந்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எமர்ஜென்சி காலம் நமக்கு உணர்த்தியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உண்மைதான். இன்னொரு விஷயம் என்னவென்றால் மற்றுமோர் எமர்ஜென்சியை தடுக்க வேண்டும் என அரசியலமைப்பு மக்களுக்கு நினைவுபடுத்தியது.

பா.ஜ.க.வின் எண்ணங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் 18-வது மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். எந்த ஒரு மனிதரும், ஆட்சியாளரும் அரசியல் அமைப்பின் கட்டமைப்பை மாற்றக்கூடாது என மக்கள் கூறியுள்ளனர். இந்தியா ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு கொள்கைகள் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக தொடர்ந்து நீடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News