இந்தியா (National)

மஹாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் தொடர்பு: பிரபல மேலாளர்கள் வீட்டில் ரூ.2½ கோடி ரொக்கம் பறிமுதல்

Published On 2023-09-21 11:13 GMT   |   Update On 2023-09-21 11:13 GMT
  • மஹாதேவ் சூதாட்ட செயலியின் தலைவரான சவுரப் சந்திரகர் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்றது.
  • சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி:

துபாயை மையமாக கொண்டு இயங்கும் மஹா தேவ் சூதாட்ட செயலியின் தலைவர் சவுரப் சந்திரகர் மற்றும் அவரது கூட்டாளி ரவிஉப்பல் ஆகியோர் மீது ரூ.5 ஆயிரம் கோடி வரை பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோர் மீதான பண மோசடி புகார் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மஹாதேவ் சூதாட்ட செயலியின் தலைவரான சவுரப் சந்திரகர் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்றது. இதையொட்டி அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பிரபல பாலிவுட் நடிகர்கள் சிலர் கலந்து கொண்டனர். இதற்காக அவர்களுக்கு ரூ.200 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த புகார் தொடர்பாகவும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சந்திரகர் திருமண நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகர்களை அழைத்து சென்ற பிரபல மேலாளர்களின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

டெல்லி மற்றும் மும்பையில் ஒரு சில மேலாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.2½ கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News