ஸ்டாக் தீந்துபோச்சு.. ராகுல் காந்தியின் பாக்கெட் சட்டப் புத்தகத்துக்கு எகிறிய டிமாண்ட்
- ராகுல் காந்தி பிரச்சாரங்களில் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது.
- ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தல் வழக்கம்போல பரபரப்புக்கும் ஆரவாரத்துக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத வகையில் நடந்து முடிந்துள்ளது. வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி பிரச்சாரத்தின்போது மக்களை வசீகரிப்பதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் மினி முதல் மெகா அரசியல் தலைவர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பிரச்சாரத்தின்போது செய்து வாக்குகளை அறுவடை செய்துள்ளனர். அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தியும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.
இந்த மொத்த தேர்தலிலும் ராகுல் காந்தி பேட்டிகளிலும் பிரச்சாரங்களிலும் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த சிவப்பு அட்டையிடப்பட்ட பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலும் ராகுல் காந்தியின் மைக்கின் அருகே அந்த சட்டப் புத்தகம் இருந்தது.
இந்நிலையில் ராகுல் காந்தியால் கவனம் பெற்ற இந்த சிறிய சைஸ் பாக்கெட் சட்டப்புத்தக எடிஷனை அதிகம் பேர் வாங்கிவருவதால் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. லக்னோவைச் சேர்ந்த EBC புத்தக நிறுவனம் தயாரித்த இந்த 624 பக்கங்கள் கொண்ட சட்டப்புத்தக 16 வது எடிஷன் கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்பக்கட்டு மொத்தமாக தீர்ந்துள்ளது. கோபால் சங்கரநாராயணன் தொகுத்த இந்த புத்தகத்துக்கான முன்னுரையை முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.