இந்தியா

போலி இணையதள முகவரி தோற்றத்தையும், திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் தோற்றத்தையும் படத்தில் காணலாம்.

எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது: திருமலையில் செயல்பட்ட போலி இணையதளம் மீது போலீசில் புகார்

Published On 2023-04-24 03:31 GMT   |   Update On 2023-04-24 03:31 GMT
  • ஏற்கனவே 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

திருமலை :

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியை போல், போலி இணையதள முகவரியைத் தொடங்கி பலர் பக்தர்களிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் திருமலையிலேயே செயல்பட்டு வந்த ஒரு போலி இணையதளத்தைக் கண்டு பிடித்து திருமலை 1-டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதற்கான தகவல் அறிக்கையை ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியின் பெயரில் சில மாற்றங்களை ஏற்படுத்தி தொடங்கிய போலி இணையதளம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புகாரை தொடர்ந்து போலி இணையதள எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தவிர திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பையும் பயன்படுத்தலாம். ஆனால், போலி இணையதளங்களை நம்ப வேண்டாம், எனப் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News