இந்தியா (National)

செரியநாடு ரெயில் நிலையம்.

கேரளாவில் 1 கி.மீ. பின்னால் வந்து பயணிகளை ஏற்றிச்சென்ற ரெயில்

Published On 2023-05-23 03:11 GMT   |   Update On 2023-05-23 03:11 GMT
  • வழக்கத்தை மீறி நடக்கும் சம்பவங்கள், அனைவரின் கவனத்தை பெற்றுவிடுகின்றன.
  • ‘பின்வாங்கிய’ இந்த விஷயம் குறித்து பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

திருவனந்தபுரம் :

வழக்கத்தை மீறி நடக்கும் சம்பவங்கள், அனைவரின் கவனத்தை பெற்றுவிடுகின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் கேரள மாநிலத்தில் நடந்திருக்கிறது.

அங்கு சோரனூரை நோக்கி வேனாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் சென்றது.

காலை 7.45 மணியளவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செரியநாடு என்ற சிறிய ரெயில் நிலையத்தை நோக்கி வந்த அந்த ரெயில், வழக்கமான நிறுத்தமான அந்நிலையத்தில் நிற்காமல் கடந்துவிட்டது. அங்கு அந்த ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள் திகைத்தனர்.

டிரைவர் தனது தவறை உணர்ந்தபோது சுமார் 1 கி.மீ. தூரம் தாண்டிவிட்டது. அதன்பிறகு நிறுத்திய அவர், ரெயிலை 'ரிவர்சில்' கொண்டுவந்து பயணிகளை ஏற்றிச்சென்றார்.

இந்தக் குழப்பத்தால் ஏற்பட்ட நேர இழப்பை, ரெயிலை விரைவாக இயக்கி சரிக்கட்டிவிட்டார் என்ஜின் டிரைவர். சோரனூர் ரெயில் நிலையத்தை சரியான நேரத்தில் சென்றடைந்துவிட்டது அந்த ரெயில். அதனால், 'பின்வாங்கிய' இந்த விஷயம் குறித்து பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இதுகுறித்து என்ஜின் டிரைவரிடம் ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் கேட்டிருக்கின்றனர்.

'பெரிய ரெயில் நிலையங்களில்தான் சிக்னல்கள் இருக்கும். செரியநாடு ஒரு சிறிய ரெயில் நிலையம் என்பதால் அங்கு சிக்னல் இல்லை. அதனால் என்ஜின் டிரைவர் கவனக்குறைவாக அந்த நிலையத்தை தவறவிட்டு சென்றிருக்கலாம். சுமார் 700 மீட்டர் வரை அந்த ரெயிலை பின்னோக்கி இயக்க வேண்டி வந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட 8 நிமிட நேர இழப்பை அந்த என்ஜின் டிரைவர் பின்னர் சரிசெய்துவிட்டார்' என்று ஒரு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

இதே போன்றதொரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது. அப்போது 'பிரேக்' செயலிழந்ததால் ஒரு ஜன சதாப்தி ரெயிலை நிறுத்த முடியவில்லை. பயணிகள் பீதி அடைந்த நிலையில் ஒருவாறு ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவர், பின்னர் சுமார் 20 கி.மீ. தூரம் ரெயிலை பின்னால் இயக்கி குறிப்பிட்ட நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்தினார்.

Tags:    

Similar News