இந்தியா

'வரலாம் வா... வரலாம் வா...' வெள்ளத்தில் ரெயிலுக்கு வழிகாட்டிய பாயின்ட்மேன்கள்

Published On 2024-07-27 02:56 GMT   |   Update On 2024-07-27 02:56 GMT
  • வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
  • பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

ரெயில்வேயில் பாயின்ட்மேன் பணி என்பது அதிகாரி தரத்திலான பணி இல்லை என்றாலும், அது ரெயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். தண்டவாளத்தின் பாயின்டுகளை சரிபார்த்து ரெயிலின் பாதுகாப்பை உறுதி செய்வது இவர்களின் பணி.

இப்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மத்தியபிரதேசத்தின் ஸ்லீமனாபாத், துண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சில இடங்களில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. பயணிகளை ஏற்றி வந்த ரெயில், தண்டவாளம் தெரியாததால் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடத்தில் பாயின்ட்மேன்கள் 3 பேர், ரெயில் முன்பாக தண்ணீரில் தண்டவாளத்தில் நடந்து சென்றபடி ரெயிலை, தங்களை பின்தொடர்ந்து அழைத்து செல்கிறார்கள்.

பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு பின்னோக்கி செல்லும்போது உதவியாளர்கள், பின்புற சூழலை சரிபார்த்து வரலாம் வா... வரலாம் வா என்று சொல்லி அழைப்பதுபோல, பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

Tags:    

Similar News