இந்தியா (National)

அமித் ஷா

மோடி அரசு உதவி செய்தாலும், தெலுங்கானா அரசு கடனில் மூழ்கியுள்ளது- அமித்ஷா

Published On 2022-08-21 21:06 GMT   |   Update On 2022-08-22 01:19 GMT
  • பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவும் மற்ற மாநிலங்களை போல் வளர்ச்சி அடையும்.
  • மத்திய அரசு எரிபொருள் விலையை குறைத்தாலும், தெலுங்கானா அரசு வரியை குறைக்கவில்லை.

தெலுங்கானா மாநிலத்திற்கு நேற்று ஒருநாள் பயணமாக சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முனுகோடே தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அண்மையில் பதவியை ராஜினாமா செய்த முனுகோடே சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

தெலுங்கானா மாநிலத்திற்கு மத்திய அரசு, 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பிறகும், மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரானது. மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து தெலுங்கானா விவசாயிகளை ஒதுக்கி வைப்பதன் மூலம் டிஆர்எஸ் அரசு பாவம் செய்கிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திருந்தால் வெள்ள பாதிப்பின் போது இழப்பீடு கிடைத்திருக்கும்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளிடம் இருந்து ஒவ்வொரு நெல்லும் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவும் மற்ற மாநிலங்களை போல் வளர்ச்சி அடையும் என உறுதியளிக்கிறேன். மத்திய அரசு இரண்டு முறை எரிபொருள் விலையை குறைத்தாலும், தெலுங்கானா அரசு வாட் வரியை குறைக்கவில்லை.


இதனால் நாட்டிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகம் உள்ள மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது. இதனால் மாநிலத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தலித்துகளுக்கு மூன்று ஏக்கர் நிலம், இரண்டு படுக்கையறை வீடுகள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.3,000 நிதியுதவி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தவறி விட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர, மாநிலத்தில் எந்த இளைஞருக்கும் வேலை கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


முன்னதாக உஜ்ஜைனி மகாகாளி கோவிலுக்கு சென்று அமித்ஷா வழிபட்டார். பின்னர், ஐதராபாத்தில் அமித்ஷாவை, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார்.

Tags:    

Similar News