இந்தியா

சர்வாதிகாரம் வலுப்பெற வேண்டுமா?: மோடியை விமர்சிக்கும் யூடியூபர்

Published On 2024-02-24 09:10 GMT   |   Update On 2024-02-24 09:10 GMT
  • த்ருவ் ரதீயின் சேனலுக்கு 18 மில்லியன் பயனர்கள் உள்ளனர்
  • பிரதமர் மோடி பேட்டி அளித்து 10 வருடங்கள் ஆகிறது என்றார் த்ருவ் ரதீ

அரியானாவை சேர்ந்த 29 வயது மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மாணவர், த்ருவ் ரதீ (Dhruv Rathee).

த்ருவ், பல வருடங்களாக, சமூக, அரசியல், சுற்றுப்புறச் சூழல் சார்ந்த விஷயங்களை குறித்து யூடியூப் (YouTube) வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்.

2023 செப்டம்பர் வரையில் அவரது வீடியோக்களுக்கு சுமார் 18 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர்.

இந்நிலையில், த்ருவ், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து வெளியிட்டுள்ள ஒரு யூடியூப் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் த்ருவ் தெரிவித்திருப்பதாவது:

வட கொரியாவிலும் தேர்தல்கள் நடைபெறுகிறது. ஆனால், அங்கு அதிபருக்கு எதிரானவர்களுக்கு வாக்களித்தால் தேசதுரோகம் என கருதப்படுகிறது.

இதே போல் ரஷியாவிலும் தேர்தல்கள் நடக்கிறது. ஆனால், அதிபருக்கு எதிரானவர்கள் மர்மமாக உயிரிழக்கின்றனர்.

தேர்தல்கள் நடந்தால் போதாது, அவை நியாயமாகவும், நடுநிலைமையுடனும் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது உண்மையான ஜனநாயகத்திற்கு வழிவகை செய்யும்.

ஆனால், சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி வெல்லக் கூடிய சூழலில் தேர்தலை நடத்தும் பொறுப்பில் இருந்த தலைமை அதிகாரி, பா.ஜ.க.வை வெல்ல செய்வதற்கு மிகப் பெரிய தேர்தல் மோசடியை செய்தார். அதிர்ஷ்டவசமாக, உச்ச நீதிமன்றம் தலையிட்டதால் அந்த ஜனநாயக மோசடி தடுக்கப்பட்டது.


கண்காணிப்பு கேமிராவும் (CCTV) வாக்குச்சீட்டு முறையும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டுபிடித்திருக்க முடியுமா?

2021ல் அசாம் பா.ஜ.க. தலைவரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் தேர்தலே மீண்டும் நடைபெற்றது.

2024 பிப்ரவரியில் புனேயில் ஈ.வீ.எம்.களின் கட்டுப்பாட்டு பகுதியை (Control Unit) 3 பேர் களவாடி சென்றனர்.

தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லாமல் பா.ஜ.க.வின் அங்கமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், வியூகங்கள் அமைத்து தரும் துறையிலிருந்தே விலகி கொண்டார்.

பிரதமர், எதிர் கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தும் மோடி அரசு ஒரு புதிய சட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினெட் அமைச்சர் உள்ள கமிட்டியை உருவாக்க முனைந்துள்ளது.

இது எவ்வாறு சுதந்திரமான தேர்தல் ஆணையம் உருவாக வழிவகுக்கும்?

தேர்தல் பத்திரங்கள் எனும் திட்டத்தில் பெரும் பங்கு பா.ஜ.க.விற்கு கிடைத்துள்ளது.

ஏழை எளிய மக்கள் தேர்தலில் பங்கெடுப்பது கடினமாகி வருகிறது.

அமலாக்கத்துறையின் வழக்குகள் 0.5 சதவீதம் மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஆனல், 3000 ரெய்டுகளுக்கும் அதிகமாக எதிர்கட்சி தலைவர்களை குறி வைத்தே இவை நடத்தப்பட்டன.


அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு துறை ஆகியவற்றை தவறாக பா.ஜ.க. கையாளுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி வசமிருந்த மாநிலங்களுக்கான பல அதிகாரங்களை மோடி அரசு தன் வசம் எடுத்து கொண்டது.


பல பெரும் முதலாளிகளின் நிதியுதவி பா.ஜ.க.விற்குத்தான் பலனளித்திருக்கிறது.

ஊடகவியலாளர்களுக்கு மோடி பேட்டி அளித்து 10 வருடங்களுக்கும் மேலாகிறது.

கேள்விகளை கேட்க வேண்டிய ஊடகவியலாளர்கள், பா.ஜ.க.விற்கு செய்தி தொடர்பாளர்கள் போல் செயல்படுகின்றனர். அத்தகைய ஊடகங்களுக்கு பா.ஜ.க. அரசிடமிருந்து பெருமளவு விளம்பர வருவாயும் கிடைக்கிறது.

77 நாட்கள் மணிப்பூர் பற்றி எரிந்தது. ஆனால், மோடி அங்கு வரவில்லை.

"ஆயுஷ்மான் பாரத்" திட்டத்தில் இறந்தவர்களுக்கு கூட சிகிச்சை தரப்பட்டதாக மோசடி நடந்துள்ளது என தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அலுவலகம் குற்றம் சாட்டியது.


வாக்காளர்களாகிய நாம் வாக்களிக்கும் போது இவையனைத்தையும் சீர்தூக்கி பார்த்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு த்ருவ் ரதீ தெரிவித்தார்.

த்ருவ் ரதீ பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News