சிறப்புக் கட்டுரைகள்

காலந்தோறும் தேர்கள்!

Published On 2024-08-01 09:15 GMT   |   Update On 2024-08-01 09:15 GMT
  • தேர் இல்லாத பெரும் ஆலயங்கள் இல்லை.
  • ஜாதி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு வாழ உதவுகிறது.

நம் ஆன்மிக வரலாற்று வீதிகளில் பலப் பல நூற்றாண்டுகளாகப் பல அழகிய தேர்கள் ஆனந்தமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் தேர் இல்லாத பெரும் ஆலயங்கள் இல்லை.

மூலவராக இருக்கும் கடவுள் தேரில் ஏறி உற்சவராக வீதியெங்கும் உல்லாசமாக வலம் வருகிறார். ஆலயத்திற்கு வந்து இறைவனை தரிசனம் செய்ய இயலாதவர்களும் தேரிலேறி வீதியுலா வரும் தெய்வத்தை வீட்டு வாயிலில் நின்றவாறே தரிசித்துப் பரவசம் அடைகிறார்கள்.

தமிழகத்தின் பற்பல ஆலயங்களில் தேர் இருந்தாலும் திருவாரூர் ஆலயத் தேர் தன் எழிலால் பிரசித்தி பெற்றது. `திருவாரூர்த் தேரழகு' என்ற பழமொழியே தமிழில் உலவுகிறது.

தேர்த் திருவிழா ஜாதி பேதங்களை மறந்து மக்கள் ஒன்றுபட்டு வாழவும் உதவுகிறது. எல்லா ஜாதியினரும் வேறுபாடு பாராமல் இணைந்துதான் தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். அதனால் `ஊர்கூடித் தேரிழுத்தல்' என்ற சொற்றொடரே தோன்றிவிட்டது.

சில புகழ்பெற்ற ஆலயங்களில் மரத் தேர் மட்டுமல்லாது, வடிவில் சிறியதும் அழகியதுமான தங்கத் தேரும் இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் ஆலயத்தின் உட் பிரகாரங்களில் தங்க ரதத்தில் சுவாமி உலா வருவதைக் காண்பதென்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

மதுரை, திருவரங்கம் போன்ற திருத்தலங்களில் தேர் ஓடுவதற்கென்றே தனி வீதிகள் இருக்கின்றன. கீழரத வீதி, மேலரத வீதி என்றெல்லாம் அவை பெயர்பெற்று விளங்குகின்றன. தேர் ஓடாத காலங்களில் மாபெரும் தேரை நிறுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட இடங்கள் தேரடி எனப்படுகின்றன.

அந்தக் கால மன்னர்கள் போரில் ஈடுபடுத்த நான்கு வகைப் படைகளை வைத்திருந்தார்கள். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பவையே அவை.

ராமாயண காலத்திலிருந்தே நம் ஆன்மிகத் தேர் ஓடத் தொடங்கிவிட்டது. தசரதன் எட்டுத் திக்கில் மட்டுமல்லாமல் பாதாளம், ஆகாயம் ஆகிய இரு திக்குகளிலும் கூடத் தேரோட்ட வல்லவனாம்.

அதனால்தான் அவன் பத்து திசைகளில் தேரோட்டக் கூடியவன் என்று பொருள்படும் வகையில் `தச ரதன்` எனப் பெயர் பெற்றான்.

சம்பராசுர யுத்தத்தின்போது தேரோட்டியாய் அவனோடு யுத்தகளம் சென்றாள் வீராங்கனையான கைகேயி. போரின் நெருக்கடியான நேரத்தில் தேரின் அச்சாணி கழன்றுவிட்டது. அப்போது தன் விரலையே அச்சாணியாக்கித் தேரை ஓட்டி தசரதனை வெற்றி பெறச் செய்தாள் அவள்.

அந்தப் பேருதவியால் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு இரண்டு வரங்கள் தர முன்வந்தான்.

வேண்டும்போது அந்த வரங்களைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிய கைகேயி, பின்னர் அந்த வரங்களைப் பயன்படுத்தித்தான் ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள் என்கிறது ராமாயணம்.

தேரோட்டி சுமந்திரர் ராமனையும் சீதையையும் லட்சுமணனையும் தேரில் அழைத்துச் சென்றுதான் கானகத்தில் கொண்டுவிட்டார்.

சித்திரசாலையில் ஓவியங்களாக இடம்பெற்றிருந்த மனிதர்களைத் தவிர, மற்ற அத்தனை மக்களும் அந்தத் தேரின் பின்னால் கண்ணீர் விட்டு அரற்றியவாறே பின்தொடர்ந்து ஓடிய காட்சியைக் கம்ப ராமாயணம் உருக்கமாகச் சித்திரிக்கிறது.

ராம ராவண யுத்தத்தின்போது ராமன் ராவணனுக்குச் சமமான உயரத்தில் இருந்து போரிட வேண்டும் என்பதற்காக இந்திரன் தன் தேரோட்டியான மாதலியையும் தனது தேரையும் ராமனுக்காக அனுப்பி வைத்தான் என்ற செய்தியும் ராமாயணத்தில் உண்டு.

உத்தரகாண்டத்தில் துணி வெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் வருந்திய ராமன், சீதையைக் கானகத்திற்கு அனுப்பி வைத்தான். தன் அண்ணியை அண்ணன் கட்டளைப்படி கானகத்திற்குத் தேரில் கொண்டுவிட்டான் லட்சுமணன். அப்போது சீதாதேவி அடுத்தடுத்து அடையும் துயரங்களை எண்ணி அந்தத் தேர் கண்ணீர் விட்டதாம்.

மகாபாரதத்தில் தேர் மிக உயர்ந்த பெருமையைப் பெற்றுவிட்டது. உலகப் புகழ்பெற்ற நீதிநூலான கீதையை பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தது தேரோட்டியாகத் தேர்ப் பீடத்தில் அமர்ந்துதான்.

கர்ணன் என்ற மாவீரனின் வளர்ப்புத் தாயான ராதை, ஒரு தேரோட்டியின் மனைவிதான்.

ராஜமாதா குந்தி தேவி திருமணத்திற்கு முன்பாகத் தனக்கு துர்வாசர் உபதேசம் செய்த மந்திரத்தின் சக்தியைச் சோதிக்க விரும்பினாள். அந்த மந்திர சக்திக்கு உட்பட்டு சூரியன் அவள்முன் தோன்றி அவளுக்கு கர்ணனைக் குழந்தையாகக் கொடுத்துவிட்டு மறைந்தான்.

கன்னிப் பெண்ணின் கையில் குழந்தை என்றால் உலகம் நகைக்குமே? அபவாதத்திற்கு அஞ்சிய குந்தி, குழந்தையை ஒரு கூடையில் வைத்து, தன்னந்தனியே கண்ணீரோடு நதிநீரில் அனுப்பி வைத்தாள்.

பிள்ளையில்லாத தனக்கு ஒரு பரிசுபோல் நதிநீர் மூலம் கிட்டிய குழந்தையைப் பாசத்தோடு வளர்த்தான் ஒரு தேரோட்டி. அவன் மனைவிதான் கர்ணனின் வளர்ப்புத் தாயான ராதை. வளர்த்த பாசத்தின் காரணமாக, போரில் இறந்த கர்ணனோடு தானும் இறந்தாள் ராதை என்கிறது மகாபாரதம்.

தேரோட்டி மகனான கர்ணனது வாழ்வின் இறுதிக் காலத்தில் தேர்கள் அவனுக்கு உதவாமல் அவன் வாழ்வை முடிக்க உதவியதுதான் கொடுமை.

கர்ணன் அர்ச்சுனன் மீது நாகாஸ்திரத்தைப் பிரயோகித்தபோது, கிருஷ்ணர் கால் கட்டை விரலால் அர்ச்சுனன் தேரை அழுத்தினார். தேர் சற்றே கீழிறங்க அர்ச்சுனன் தப்பித்தான்.

போர் முடியும் தறுவாயில் கர்ணனின் தேரோட்டியான சல்லியன் தேரை ஓட்ட மறுத்து விலகிச் சென்றான். மண்ணில் அழுந்திய தேர்ச் சக்கரத்தை எடுக்க கர்ணன் முனைந்தபோது, கிருஷ்ணர் உத்தரவுப்படி அர்ச்சுனன் அம்பு போட கர்ணன் மரணத்தைத் தழுவுகிறான்.

எதிரியின் தேர், தன் தேர் என இரண்டு தேர்களுமே சந்தர்ப்ப வசத்தால் கர்ணன் மரணத்திற்குத் துணைபோனதை மகாபாரதம் சொல்கிறது.

கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்து `பார்த்த சாரதி` எனப் பெயர் பெற்றார் என்றால், அத்தகைய கிருஷ்ணனுக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் தேரோட்டியாக இயங்கினாள் அவர் மனைவி சத்தியபாமா என்கிறது பாகவதம். நரகாசுரனைக் கிருஷ்ணர் வதம் செய்தபோது அவருக்குத் தேரோட்டும் பணி செய்தவள் சத்தியபாமாதான்.

சங்க கால மன்னன் பாரியின் வரலாற்றில் அவன் வள்ளல் தன்மையைப் புலப்படுத்தும் வகையில் ஒரு தேர் வருகிறது. படர்வதற்குக் கொழுகொம்பில்லாமல் கானகத்தில் தத்தளித்த முல்லைக் கொடியின் தவிப்பைக் கண்டு, அதன் அருகே அது படர வசதியாகத் தன் தேரை நிறுத்திவிட்டு மன்னன் பாரி நடந்தே அரண்மனை திரும்பினானாம்.

`முல்லைக்குத் தேரீந்த பாரி` என அவன் வள்ளல்தன்மையைப் போற்றிப் புகழ்கின்றன பழந்தமிழ் இலக்கியங்கள்.

சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருவதாகத் தெரிவிக்கின்றன புராணங்கள்.

சூரியக் கிரணங்களிலிருந்து ஏழு நிறங்கள் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கிறது இன்றைய அறிவியல்.

சூரியனின் தேர் ஒற்றைச் சக்கரத் தேர். அந்தத் தேர் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லாது.

சூரியனால்தானே நாள் கணக்கிடப் படுகிறது? அது காலத்தின் அடையாளம். காலம் முன்னோக்கிச் செல்லுமே அல்லாது ஒருபோதும் பின்னோக்கிச் செல்வதில்லையே?

மனுநீதிச் சோழன் கதையில் அந்த மன்னனின் மகன் வீதிவிடங்கன் தேரிலேறி உலாச் செல்கிறான். அப்போது ராஜகுமாரன் செலுத்திய தேரின் அடியில் ஒரு பசுங்கன்று அகப்பட்டு இறந்து போகிறது.

அந்தக் கன்றை ஈன்ற தாய்ப்பசு அரண்மனை சென்று ஆராய்ச்சி மணியை அடித்து அரசனிடம் நீதி கேட்கிறது.

அரசன் தன் மகன்மீது தான் தேரைச் செலுத்தி, தன் மகனைத் தானே கொன்று, அந்தப் பசு அடைந்த துயரத்திற்கு நீதி வழங்குகிறான் என்கிறது மனுநீதிச் சோழன் கதை.

பின்னர் சிவபெருமான் அருளால் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த பசுவின் கன்றும் அரச குமாரனும் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததையும் அந்த வரலாறு விவரிக்கிறது. வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் என்ற தலைப்பில் இந்த வரலாற்றை ஓர் உரைநடைக் காப்பியமாக எழுதியிருக்கிறார்.

புத்தர் வரலாற்றிலும் தேருக்கு ஓர் இடம் உண்டு. சன்னா என்ற தேரோட்டி மூலம் முதல் முறையாக வெளியுலகத்தில் தேரில் வீதியுலா போகிறான் ராஜகுமாரன் சித்தார்த்தன். பிணி மூப்பு சாக்காடு ஆகிய மூன்றையும் மனிதர்கள் தவிர்க்க இயலாது என்பதை நேரில் கண்டு புரிந்து கொள்கிறான்.

சித்தார்த்தன் மனத்தில் ஞானத் தேடல் பிறக்கிறது. அன்றிரவே மனைவி யசோதரையையும் மகன் ராகுலனையும் பிரிந்து மறுபடியும் நள்ளிரவில் தன் தேரிலேறி தேரோட்டி சன்னா தேரை ஓட்ட கானகம் வருகிறான்.

சன்னாவைத் திரும்ப அனுப்பி விட்டு கானகத்தின் உள்நடந்த சித்தார்த்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றுப் பின் புத்தராக மலர்கிறான் என்பதை விவரிக்கிறது புத்தர் திருச்சரிதம்.

புத்தர் என்ற மெய்ஞ்ஞானியை உருவாக்கியதில் போதி மரத்திற்கு மட்டுமல்லாமல் அவரைக் கானகம் வரை கொண்டுவிட்ட தேருக்கும் பங்கிருக்கிறது!

திருவள்ளுவர் காலத்திலேயே தேர் புகழ்பெற்ற வாகனமாக இருந்து வந்திருப்பதைத் திருக்குறள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. `கடலோடா கால்வல் நெடுந்தேர்' என்றும் `உருள்பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார்' என்றும் இரண்டு குறட்பாக்களில் தேர் உவமைப் பொருளாகப் பேசப்படுகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவரே அழகிய கல் தேரில்தான் காட்சி தருகிறார்.

நம் இல்லத்து மகளிர் அவரவர் இல்ல வாயிலை அலங்கரிக்கும் வகையில் தீட்டும் கோலங்களில் புள்ளி வைத்து இழையிழுத்துப் போடும் தேர்க்கோலம் புகழ்பெற்றது.

நம் தெய்வங்களின் புகழை வீதியெல்லாம் ஓடி ஓடிப் பிரசாரம் செய்து பக்தியை வளர்க்கும் தேர்கள் நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவை என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News