சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்- நிலையாமை

Published On 2024-10-06 08:00 GMT   |   Update On 2024-10-06 08:00 GMT
  • நிலையானது என்று கூறுகையிலேயே நிலையில்லாத ஒன்று இருப்பது புலப்படுகிறது.
  • மரணத்தை வென்று என்றும் அழிவில்லாத ஞானிகளின் திருவடிகளை வணங்கும் பூஜையும் நிலையானது.

அதிகாரம்: நிலையாமை

இந்த அதிகாரத்தில்,

நில்லாதவற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

என்ற குறளில் தொடங்கி

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

நிலையானது என்று கூறுகையிலேயே நிலையில்லாத ஒன்று இருப்பது புலப்படுகிறது. நிலையானதை நாம் நம்பவேண்டும் பலகோடி ஆண்டு வாழுகின்ற ஞானியர்கள் நிலையானவர்கள். அவர்கள் மீது நாம் செலுத்துகின்ற பக்தி நிலையானது. மரணத்தை வென்று என்றும் அழிவில்லாத ஞானிகளின் திருவடிகளை வணங்கும் பூஜையும் நிலையானது.

பல ஆண்டுகள் புண்ணியம் செய்து இறுதியில் இறந்து விட்டாலும் அந்த புண்ணியம் ஆன்மாவை சேரும். ஞானிகளை பூஜை செய்தால் ஞானிகளின் ஆசியும் கருணையும் நம் ஆன்மாவையே சேரும். உடம்பு அழியக் கூடியது. உயிர் அழியாதது. உடம்பும் உயிரும் சேர்ந்து செய்யக் கூடிய நற்செயல் உயிருக்கு ஆதாயத்தைத் தரும். தனி உடம்பு பிணம், தனி உயிர் செயல்பட முடியாது. உடம்பும் உயிரும் சேர்ந்து செய்கின்ற தீமைகள் உயிருக்கு பாவத்தை உண்டாக்கும். எனவே புண்ணியமும் பூஜையுமே நிலையானது.

புண்ணியம் செய்கின்ற மக்களுக்கு உடல் ஆரோக்கியம் இருக்கும். உயர்ந்த பண்புள்ள வசதியான குடும்பத்தில் பிறப்பார்கள் பாவம் மிகுதியாக செய்தவர்களுக்கு குழந்தைக்கு பால் வாங்குவதற்கும் வசதி இல்லாமல் இருக்கும். துயரமான குடும்பங்களில் பிறந்து அல்லலுறுவார்கள். பிச்சைக்காரர்களாகவும் பிறந்து வறுமையும் பிணியும் சூழ்ந்து நாரகத்தை அனுபவிப்பார்கள்.

கடவுளே ஆட்சி செய்தாலும், முதலாளித்துவ நாடாக இருந்தாலும், சோஷலிச நாடாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மனிதர்களை அல்லல்படுத்தும் நோய்களும் இருக்கும். மனிதனுடைய வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடையாது, எனவே, நிலையானது, உத்திரவாதம் உடையது புண்ணியமும் அருளுமே ஆகும். இறைவன் நம் மீது செலுத்துகின்ற தயை, ஆசி, கருணை இவையே அருள். இத்தகைய அருளை பெற தலைவனை உருகி பூஜை செய்தல் வேண்டும்.


வாழ்க்கையில் கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதும் எதிர்கால கற்பனைகளும் ஒருவித பாவமே. இது மனிதரை பலகீனமாக்கும். தலைவனின் ஆசி இருந்தால் நடப்பது எல்லாமே நன்மைக்கே என்ற நம்பிக்கை வரும். மனம் சாந்தம் அடையும். பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக ஆடம்பர வாழ்க்கை வாழ்வது நமது வாழ்க்கைக்குப் பலன் தராது. அத்தகைய மோகத்தில் பலர் கடன் சுமையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். செல்வம் நிலையில்லாதது.

அது இருக்கும்பொழுதே நிலையான தர்மத்தை செய்து கொள்ள வேண்டும். நாம் காணுகின்ற கற்பனை உலகமும் வாழ்க்கையும் அழியக் கூடியது. இந்த உண்மையைப் புரிந்து கொள்வது ஒருவித ஞானம். அழகு, இளமை, உடல் இவைகளெல்லாம் நிலையில்லாதது. காற்று நிலையானது. சூரியன் நிலையானது. ஆகாயம் நிலையானது. பஞ்ச பூதங்களால் படைக்கப்பட்ட உயிர்கள் வினாடிக்கு வினாடி மாற்றமடைந்து வீழ்ந்து போகும். இதுதான் உலகம்.

ஆன்மீக துறையில் வருகின்ற மக்கள் இதனை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். மனைவி, மக்கள், உறவுகள் எல்லாமே அழியக்கூடியது. நீயும் ஒருநாள் அழியக் கூடியவனே. உணர்ச்சியற்றப் பொருள்களான கட்டிடம் வீடு மற்றும் ஜடப்பொருள்கள் நிலையாக இருக்கும். உணர்ச்சியுள்ள பொருளான மனிதன் அழிந்துவிடுவான். இதனைப் புரிந்து நிலையான புண்ணியத்தையும் பூஜையையும் நாம் செய்ய வேண்டும்.

உண்மையைப் புரிந்தவன் மனைவியை தாயாகப் பார்ப்பான். இரவில் மனைவியாகப் பார்ப்பான். கருணை நிறைந்த உருவத்தைப் பார்ப்பான். நாம் செய்கின்ற அறத்திற்கும் பூஜைக்கும் துணையாக மனைவி இருப்பாள். நமது காமத்தை தணித்து சாந்தப்படுத்துவாள். மனைவியின் அன்பினாலும் குழந்தையின் ஸ்பரிசங்களாலும் தன்னுடைய மனத்துயரங்களில் இருந்து விடுபடுவான். இவையெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் அழியக் கூடியது என்று கூறியிருந்தாலும் அழியக் கூடிய ஒன்றிலிருந்தே தம்முடைய ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வது சிறப்பறிவு.

நம்மை நாடி வரும் விருந்தினரை உபசரிப்பதும், ஏழைகளுக்கு உணவு சமைத்துப் பரிமாறக் கூடிய பண்பும் இருந்தால் அவள் கருணைக் கடலாய் விளங்குகின்றாள். அவளை கணவன் மட்டுமல்ல நாமும் வணங்க வேண்டும். மனைவியே நம் ஜென்மத்தை கடைத்தேற்ற உதவுவாள். முரண்பட்ட மனைவி அமைந்தாலும் இடைவிடாது தலைவனை வேண்டினால் மனைவிக்கு நல்ல குணப்பண்பு உண்டாகும்.

ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

நமக்கு உறுதுணையாக உள்ள மனைவி மற்றும் உறவினர்களை கொண்டே நிலையான வழியில் செல்லவேண்டும். நிலையில்லாத ஒன்றை நிலையானது என்று எண்ணுகின்ற எண்ணம் தலைவன் மீது கொண்ட பக்தியினால்தான் மாறும். நிலையில்லாத ஒன்றை உயர்ந்தது என்று நினைக்கின்ற மயக்கம் தீரவேண்டும். தாமரை இலை தண்ணீர் போல் இருந்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் இருப்பான். ஆனால் எதிலும் அகப்பட மாட்டான்.

அன்பு என்று சொல்லப்பட்ட தாய், அருள் என்ற குழந்தையை பெற்றெடுத்தாள், அருள் என்ற குழந்தையை பொருள் என்ற வளர்ப்புத்தாயினால்தான் வளர்க்க முடியும். அந்த பொருள் இறைவன் மீது எழுகின்ற பக்தியின் காரணமாக வருகின்றது. உயிரையும் உடம்பையும் நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். தலைவன் நம்முடைய சிந்தையில் தங்கி உணர்வாக மாறவேண்டும். அப்போதுதான் உடம்பையும் உயிரையும் புருவமத்தியில் நிலைப்படுத்த முடியும்.

உயிர் கோடான கோடி ஜென்மம் எடுத்துள்ளது. நாம் அனுபவிக்கின்ற துன்பங்களில் இருந்தும் துயரங்களில் இருந்தும் உயிர் ஒதுங்கியிருக்கும்; பெரிய நோய் வந்தால் உயிர் நம்மைவிட்டு போய்விடும். உயிருக்கு நிலையான வீடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. அதுவே புருவமத்தி. பல லட்சம் ஆண்டுகளாக பல ஜென்மங்களில் பெண்ணாகவும் ஆணாகவும் கூன்குருடாகவும் உடம்பில் இருந்த உயிர் புருவமத்தியில் மட்டுமே தங்கும்.

அதுதான் சாகாக்கால், நாம் விடுகின்ற சுவாசம் காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை சூரிய கலையும், 8 மணியில் இருந்து 10 மணி வரை சந்திரகலையும், 10 முதல் 12 மணி வரை சூரியகலையுமாக மாறிமாறி ஒரு நாளைக்கு 12 முறை மாறும். இந்த காற்றை தலைவனின் திருவருள் கொண்டு புருவமத்தியில் செலுத்துகின்றவனுக்கு 1000 கோடி பிரம்ம பட்டம் கிடைக்கும். அதுவே சாகாக்கால். அந்த மூச்சுக்காற்றுடன் தலைவன் உள்ளே செல்வான். மூச்சோடு கலந்து மயிரிழை போன்ற நரம்பு வழியாக மூலாதாரத்தில் தங்கிவிடுவான்.

அப்போது இந்த தேகம் ஞானதேகமாக மாறும். உலகம் தோன்றி பலலட்சம் கோடி ஆண்டாகிவிட்டது. கடல் ஆயிரம் முறைவற்றினாலும் மூச்சுக் காற்றை கட்டிய மனிதன் அழியமாட்டான். இத்தகைய ரகசியங்கள் தமிழ் மொழி படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தமிழ் ஞானமொழி. ஐந்து என்பது பஞ்சபூதம், மூன்று என்பது இடகலை, பின்கலை, சுழிமுனை. பஞ்சபூதம் அனாதி, இடகலை பின்கலை, சுழிமுனை அனாதி.

இந்த ரகசியம் தமிழ் படித்தால் மட்டுமே புரியும். இந்த உண்மைகளை மரணமிலாப் பெருவாழ்வை பெற்ற திருமூலரும், ராமலிங்க சுவாமிகள் மட்டுமே அறிந்து அதை நமக்கு கவிகளாக அருளியுள்ளார்கள், அவர்களின் திருவடியைப்பற்றி பூஜை செய்தால் அதன் உண்மையை நாம் புரிந்து கொள்ளமுடியும். அதுவே உண்மையானது; உறுதியானது; நிலையானது; மற்றது யாவும் நிலையில்லாதது.

Tags:    

Similar News