சிறப்புக் கட்டுரைகள்

வள்ளலார் போதித்த வாழ்க்கை நெறி

Published On 2024-07-11 09:20 GMT   |   Update On 2024-07-11 09:20 GMT
  • துறவியர் வரிசையில், வள்ளலாருக்கும் ஒரு தனி இடம் உண்டு.
  • வள்ளலாரின் உரைநடை நூல்களில் உடல்நலம் சார்ந்த பல குறிப்புகள் உண்டு.

எழுத்தாளர்களாக இருந்த துறவியர் பலர் உண்டு. வால்மீகி, வியாசர் போன்றோர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய துறவியர். ஸ்ரீஅரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதிய துறவி. தாயுமானவர், பட்டினத்தார் போலத் தமிழில் எழுதிய துறவியர் வரிசையில் இணைபவர் வள்ளலார்.

`துறவு என்றால் உடலை வருத்திக் கொள்வது அல்ல, மனிதர்கள் உடல் நலனை நன்கு பேணுவது அவசியம் என்ற கருத்துடைய துறவியர் சிலர் உண்டு. `உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!` என்றார் திருமூலர். `கால்பந்து விளையாடி உடலை வலிமைப் படுத்தினால் கீதை நன்றாகப் புரியும்` என்றார் விவேகானந்தர்.

உடல் நலன் பற்றி அக்கறை செலுத்திய இத்தகைய துறவியர் வரிசையில், வள்ளலாருக்கும் ஒரு தனி இடம் உண்டு.

வள்ளலாரின் உரைநடை நூல்களில் உடல்நலம் சார்ந்த பல குறிப்புகள் உண்டு. அவரது உரைநடைத் தொகுப்பு நம் வாழ்வுக்குத் தேவையான எண்ணற்ற செய்திகளைச் சொல்கிறது.

கழிவுப் பொருட்களை அகற்ற வேண்டும் என்ற உணர்ச்சி உடலில் தோன்றிய உடனேயே அவற்றை அகற்றி விட வேண்டும் என்றும், `ஒன்றடக்கல் இரண்டடக்கல்` போன்றவை உடல் நலத்தைப் பெரிதும் சிதைத்துவிடும் என்றும் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார். நம் பாரத தேசத்தில் பல பெண்களின் உடல்நலக் குறைவுக்கு காரணம், அவர்களுக்கு உடல் கழிவுகளை அப்புறப்படுத்த போதிய வசதிகள் பல இடங்களில் கிடைக்காமல் இருப்பதே.

வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்கம். இளம் வயதிலேயே தந்தை ராமையாவை இழந்தார். தாய் பெயர் சின்னம்மை. ராமலிங்கத்தையும் சேர்த்து அவருக்கு ஐந்து குழந்தைகள். சபாபதி, பரசுராமன், ராமலிங்கம் என மூன்று புதல்வர்கள். சுந்தரம்மாள், உண்ணாமுலை என இரண்டு புதல்விகள்.

கணவர் காலமானபின் சின்னம்மை தன் மூத்த மகன் சபாபதி வீட்டிற்கு வந்துசேர்ந்தார். பின், நெடுநாட்கள் சின்னம்மை உயிர் வாழவில்லை. தாயின் மரணத்திற்குப்பின் ராமலிங்கத்திற்கு சபாபதியின் மனைவியான அவர் அண்ணியே தாயானார்.

தன் மைத்துனன் ராமலிங்கத்தை அளவற்ற பாசத்தோடு பராமரித்த உன்னதமான அண்ணி அவர். தமிழ் இலக்கிய வரலாறு, அவருக்கு இணையான இன்னோர் அண்ணியைக் கண்டதில்லை.

கடவுளை நேரில் கண்ட மகான் வள்ளலார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் நள்ளிரவு முடிய தியானத்தில் ஆழ்ந்திருந்தார். பின் விழிப்படைந்து நேரம் நள்ளிரவைத் தாண்டியிருப்பதை உணர்ந்து வீடுவந்து சேர்ந்தார்.

அவருக்குச் சோறிடுவதற்காக நெடுநேரம் காத்திருந்த அண்ணி, ராமலிங்கம் வந்தால் கதவைத் தட்டட்டும் என எண்ணி கதவைத் தாளிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அண்ணியின் உறக்கத்தைக் கெடுக்க ராமலிங்கம் விரும்பவில்லை. திண்ணையில் சாப்பிடாமலே படுத்தார். அப்போது வடிவுடையம்மன், அண்ணியின் வடிவு உடைய அம்மனாக, அண்ணி வடிவில் அவர்முன் தோன்றினாள்.

`பசியோடு உறங்கலாமா? சாப்பிடு` என இலைபோட்டு அன்னம் பரிமாறினாள்.

`அம்பிகையைப் பார்க்க ஆலயத்திற்குப் போனேன். அங்கேயே தியானத்தில் நெடுநேரம் கழிந்துவிட்டது` எனத் தயக்கத்தோடு தெரிவித்தார் வள்ளலார்.

`அம்பிகையைப் பார்க்கக் கோயிலுக்குப் போவானேன்? என்னைப் பாரேன்!` என்றாள் அம்பிகை. வள்ளலார் திகைத்தார்.

`எல்லாப் பெண்களும் அம்பிகையின் வடிவம்தானே?` என்று சூசகமாகச் சொல்லிக் கலகலவென்று நகைத்தாள் அம்பிகை.

அன்னத்தை வாயிலிட்ட வள்ளலார் அதன் ருசியில் மயங்கினார்.

`அண்ணி! உங்கள் சமையல் இன்று தேவாமிர்தம்போல் இனிக்கிறதே!` என்றார்.

`ஆமாம். தேவாமிர்தம்தான் போயேன். தேவலோக ஆட்கள்தான் இன்று சமைத்தார்கள்!` என்று சொல்லி மீண்டும் நகைத்த அம்பிகை, போவதுபோல் போக்குக் காட்டி மறைந்துவிட்டாள்.

சிறிதுநேரம் சென்றதும் உண்மையான அண்ணி கதவைத் திறந்து வந்து வள்ளலாரைச் சாப்பிட அழைத்தாள். அப்போதுதான் வந்தது அம்பிகை என்பது வள்ளலாருக்குப் புரிந்தது. அம்பிகை வந்து சென்ற சாட்சியாக அவர் சாப்பிட்ட இலை அங்கே கிடந்தது.

காளிதாசனுக்கு நாவில் வெற்றிலை துப்பியும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தும் அறிவுபுகட்டிய அம்பிகை, வள்ளலாருக்கு அன்னமிட்டுத் தமிழை வழங்கிவிட்டாள். அதன்பின் வள்ளலார் நாவில், அவர் சொன்னதெல்லாம் கவிதையாக மலரத் தொடங்கியது.

மணவாழ்வில் நாட்டமில்லாதிருந்த ராமலிங்கம், உறவினர்களும் குருநாதர்களும் வற்புறுத்தியதால், அவரது அக்கா உண்ணாமுலையின் மகளான தனக்கோடியை மணந்தார்.

பள்ளியறையிலும் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் வள்ளலார். `வான்கலந்த மாணிக்கவாசகரின் வாசகத்தைத் தான் கலந்து பாடும் போது திகட்டாமல் இனிக்கிறது` என்று பாடியவர் அல்லவா அவர்?

தனக்கோடி, கணவரின் மனமெல்லாம் ஆன்மிகமே நிறைந்துள்ளதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவரை வணங்கி, அவர் முழுமையாக ஆன்மிக நெறியில் வாழவேண்டும் என வேண்டி வழியனுப்பி வைத்த பக்குவம் தனக்கோடி அம்மாளுடையது. இந்தியத் துறவியரில் கணவர் துறவு பூண்டபோது அதை மனப்பூர்வமாக ஆதரித்த மனைவி என்ற பெருமை தனக்கோடி அம்மாளுக்கு மட்டுமே உரியது.

அற்புதம் நிகழ்த்திய மகான்கள் வரிசையிலும் வள்ளலாருக்கு இடமுண்டு. ஆனால் அவர் அற்புதங்களை விரும்பவில்லை.

தங்கத்தை வெறுத்த அவர், ஓர் இரும்புக் கம்பியைத் தங்கமாக்கி, பின் இந்தத் தங்கத்தால் என்ன பயன் எனக் கேட்டு அதை மீண்டும் இரும்பாக்கிக் கிணற்றில் வீசிவிட்டு நடந்தவர்.

வள்ளலார் `கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக!` என மூட நம்பிக்கைகளைச் சாடினார்.

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்` என வள்ளலார் எழுதியுள்ள வரி, அவரின் வானளாவிய அன்பிற்கு அடையாளம். பக்தித் தமிழின் பெரிய பொக்கிஷம் அவர் பாடல்களின் தொகுப்பு.

சீனிவாச வரதாச்சாரியார், ஞானசுந்தரமய்யர், வீராசாமி முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, பண்டார ஆறுமுக ஐயா போன்ற பற்பலர் அடுத்தடுத்து வள்ளலாரின் அடியவர்களானார்கள்.

இவர்களின் வேண்டுகோளின் பேரில்தான் வள்ளலார் `நெஞ்சறிவித்தல், மகாதேவ மாலை, சிவநேச வெண்பா` போன்ற கவிதை நூல்களை எழுதினார். வள்ளலார் தம் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் மனிதர்கள் மேல் பாட்டுப் பாடியதில்லை.

புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார் போன்றோர் வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழுவூர் வேலாயுத முதலியார் அளித்த பொருளுதவியோடு வள்ளலார் பாடல்களைத் திருமுறைகளாக வகுத்து வெளியிட்டனர்.

தமிழ்த் தாத்தாவின் குருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றோர் வள்ளலாரின் அருட் பாடல்களைக் கொண்டாடினர்.

அப்போதுதான் ஆன்மீக வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விந்தையான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஆறுமுக நாவலர் என்ற தமிழறிஞர் வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்கள் என அழைப்பது தவறு என வழக்குத் தொடர்ந்தார். அவ்விதம் அழைப்பது மிகையான கூற்று என்பது நாவலர் கருத்து.

மஞ்சக் குப்பம் டிஸ்டிரிக்ட் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போது அங்கு டிஸ்ட்ரிக்ட் முன்சீபாகப் பணியாற்றியவர் நேர்மைக்குப் புகழ்பெற்ற முத்துசாமி ஐயர்.

வள்ளலார் ஒளிவீசும் முகத்துடன் நீதிமன்றத்தின் உள்ளே தென்றல்போல் நுழைந்தார். அங்கே ஏற்கெனவே வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலர் வந்து அமர்ந்திருந்தார்.

வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்ததும் அங்கு இன்னதென்றறியாத தெய்வ சான்னித்தியம் உணரப்பட்டது. அனைத்து மக்களும் நீதிபதி முத்துசாமி ஐயரும் அந்தத் தூய துறவிக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் எழுந்து நின்றார்கள். வள்ளலாருக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரும் தம்மையறியாமல் எழுந்து நின்றார்.

அதையே சான்றாதாரமாகக் கொண்ட முத்துசாமி ஐயர், வழக்குத் தொடுத்தவராலும் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள வள்ளலார் எழுதியவற்றை அருட்பா என்று அழைப்பதில் தவறேதும் இல்லை என்று தீர்ப்பளித்தார்.

(இந்தப் புகழ்பெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய டிஸ்டிரிக்ட் முன்சீப் முத்துசாமி ஐயர், காலப்போக்கில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி முத்துசாமி ஐயரின் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.)

வள்ளலார் போதித்த நெறிகளில் முக்கியமானது ஜீவகாருண்யம். புலால் உணவை வெறுத்தார் அவர். `கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்` என்ற வள்ளுவர் நெறியே வள்ளலார் நெறி. தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாரின் சிந்தனை மரபு வள்ளலாரிடமிருந்து வந்தது. அணையா அடுப்பேற்றி வந்தவர்க்கெல்லாம் அன்னம் வழங்க ஏற்பாடு செய்த மகான் வள்ளலார்.

வள்ளலார் ஐம்பது ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் இவ்வுலகில் தன் உருக்காட்டி எல்லா மானிடர் போலவும் வாழ்ந்து வந்தார். சொற்பொழிவுகள் மூலம் ஆன்மீகத்தைப் பிரசாரம் செய்துவந்த அவர் தம் இறுதிக் கட்டச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி முடித்தார். தம் வாழ்வின் கடைசி மூன்று மாதங்கள் மவுனத்தில் ஆழ்ந்தார்.

1874 ஜனவரி முடிவில் மூன்று மாத மவுனத்தை விடுத்து, மீண்டும் பேசத் தொடங்கினார். பல முக்கியமான அறிவுரைகளை அடியவர்களுக்கு வழங்கினார். பின் படுக்கையில் சாய்ந்துகொண்டார்.

தமது உருவம் எவருக்கும் புலப்படாதிருந்து சில காலத்திற்குப் பிறகு பிரணவ தேகமாக குருநிலை பெற்று சித்துகள் புரியும் என்று குறிப்பிட்டார்.

அவர் உத்தரவிட்டபடி, கதவுகள் மூடப்பட்டன. சிறிதுகாலம் சென்றபின் கதவைத் திறக்கவே அங்கு வெறும் வெளிதான் இருந்தது. வள்ளலார் பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பஞ்ச பூதங்களிலேயே கரைத்துக் கொண்டு உலகெங்கும் நிறைந்துவிட்டார்.

`அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை` என்ற சொற்றொடர்கள் வள்ளலார் நமக்கு ஆக்கி அளித்த மந்திரங்கள். வள்ளலார் இப்போதும் தம்மை நாடும் அடியவர்களின் உள்ளங்களில் தோன்றி அருளாசி வழங்கி வருகிறார்.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News