சிறப்புக் கட்டுரைகள்

சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை!

Published On 2024-07-08 08:28 GMT   |   Update On 2024-07-08 08:28 GMT
  • அனைவருக்கும் வாழ்வில் பல சவால்கள் ஏற்படும் தான்.
  • தர்ம பாதையினை விட்டு அதர்ம பாதையில் செல்லக்கூடாது.

நல்ல கருத்துக்களை கேட்பதற்காக பல வருடங்களுக்கு முன்பு மக்கள் ஒன்று கூடுவதற்கு நல்ல இடங்கள் இருந்தன. அங்கு மக்களுக்கு படித்தவர்கள், குருமார்கள் பல நல்ல செய்திகளை 'பிரசங்கம்' செய்வார்கள். இது பல காலமாக நடந்து வரும் நிகழ்வு. இந்த நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன.

காலத்தின் முன்னேற்றம் காரணமாக பல அறிஞர்களின் சொற்பொழிவுகளை உட்கார்ந்த இடத்திலேயே ஒரு சிறிய செல்போன் உதவியுடன் கேட்கின்றோம். இது மிக நல்லதே. வால்மீகியின் ராமாயணம் என்கின்றோம்.

வேத வியாசரின் மகாபாரதம் என்கின்றோம். இவை நடந்தது நடந்தபடியே சிறிதும் மாறாமல் அப்படியே இருக்கின்றது என்று நம்மால் உறுதி அளிக்க முடியாது. காலம் செல்ல செல்ல சில நீக்கல்கள் இருக்கலாம். சில இடைச் செருகல்கள் இருக்கலாம். மையக் கருத்து மாறாமல் இருக்கின்றது எனலாம்.

அவ்வகையில் சில உரையாடல்களாக நாம் சில பகுதிகளை நாம் அறிந்த மொழியில் படிக்கின்றோம். அவற்றி னை நிரூபணம் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. மனிதனுக்கு நல்லவை ஆற்றுபவையாயின் அவையும் வரவேற்கத்தக்கதே.

மகாபாரதத்தில் கர்ணன், கண்ணன் இடையே நிகழ்ந்த உரையாடலாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளதனைப் படிப்போம்.

கர்ணன்- 'நான் முறையான உலக வழக்கப்படி பிறக்காதது என் தவறா?

'என் அன்னை நான் பிறந்த உடனேயே என்னை பரிதவிக்க விட்டுச் சென்று விட்டாள்.

'நான் சத்ரியன் அல்ல என்று கருதப்பட்டதால் எனக்கு தகுதி யோடு படிப்பு கற்றுத் தரப்பட வில்லை.

'குரு பரசுராமன் அவர்கள் எனக்கு வித்தைகள் கற்றுத் தந்தாலும் அவை எனக்கு மறந்து போகும் என சாபமளித்தார். அவ ருக்கு அப்போது நான் குந்தியின் மகன் என்று தெரியாது.

'திரவுபதியின் சுயம் வரத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டேன்'

'என் அன்னை குந்திதேவி கூட தனது மற்ற மகன்களை காப்பாற்ற வேண்டியே என்னிடம் வந்தாள்'

ஆக என் வாழ்வில் எனக்குக் கிடைத்த உணவு, உடை, அந்தஸ்து இவை அனைத்தும் துரியோதணன் மூலமாகவே கிடைத்தது. அதனால் தான் நான் அவனுக்கு பக்க பலமாக, உறுதுணையாக நிற்கின்றேன்.

இது தவறா கண்ணா? சொல் என்றான்.

 கிருஷ்ணர் கூறிய பதில்கள்

"கர்ணா நான் பிறந்தது ஜெயிலில். இறப்பு என் பிறப்பிற்கு முன்பே காத்திருந்தது.

'மாடு, சாணி இவைகளோடு நான் நடப்பதற்குள் என்னை கொல்ல பல முயற்சிகள் என்ற சூழ்நிலை'

'படிப்பு என்பதே கிடையாது'

'மக்களில் பலர் அவர்கள் வாழ்வின் பிரச்சனைக்கு நானே காரணம் என்று கூறினர்.'

'உன் திறமைகளுக்காக நீ பாராட்டப்பட்டாய். எனக்கு எந்த கல்வியும் சிறு வயதில் கிடைக்க வில்லை. ரிஷி சண்டியானி குருவிடம் நான் 16 வயதில் தான் சென்றேன்.

'நீ விரும்பிய பெண்ணை மணந்தாய்' நான் விரும்பிய பெண் எனக்கு கிடைக்க வில்லை. அரக்கர்களிடம் இருந்து மீட்ட பெண்களையும் மணக்க வேண்டியது ஆயிற்று.

'என் சமூகத்தினை ஜராசந்திடம் இருந்து காப்பாற்ற யமுனை கரையில் இருந்து மாற்ற வேண்டி இருந்தது. என்னை பலரும் தைரிய மில்லாதன், ஓடி விட்டான்' என்றனர்.

' நீ யுத்தத்தில் ஜெயித்தாலும், தோற்றாலும் உனக்கு புகழ் கிடைக்கும்.

'எனக்கோ குற்றம், குறைகளே கிடைக்கும்.

ஆக பிறந்த அனைவருக்கும் வாழ்வில் பல சவால்கள் ஏற்படும் தான். அதனை காரணம் காட்டி தர்ம பாதையினை விட்டு அதர்ம பாதையில் செல்லக்கூடாது. வாழ்க்கை அனைவருக்கும் எளிதான தாகவும், நேர்மை பாதை யாகவும் இருக்காது.

ஆனால் அதற்காக உள்ளு ணர்வு கூறும் தர்ம பாதை யில் இருந்து மாற இவை சாக்கு போக்காகாது. எத்தனை முறை அவமானப் பட்டாலும், விழுந்தாலும் வாழ்க்கை உன்னை அதர்ம பாதைக்குச் செல்லும் மனதினை தரவில்லை.

விதி என்பது நாம் அணியும் காலணியை பொறுத்து அல்ல. நாம் வைக்கும் அடிகளைப் பொறுத்தே' என பதிலளித்தார்.

இதில் பூச்சுகள் இருக்க லாம். மிகைப்ப டுத்தல் இருக்கலாம். இருந்து விட்டு போகட்டும். எத்தனை பெரிய கருத்து எத்தகைய அறிவுரை, அன்னபறவை போல் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம். தெரிந்து கொள்வோம்.

இதிகாசங்கள், புராணங்கள், புனித நூல்கள் (எந்த மதமாயினும் சரி) திருக்குறள் இவை அனைத்துமே அனைவராலும் அறியப்பட வேண்டியவைதான். அததன்படிதான் ஒருவர் நடக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஆனால் கிடைக்கும் அறிவு, ஞானம் இவை மனிதனின் மனதினை தூசு தட்டிக் கொண்டே இருக்கும். பல செய்திகளை நாமே நம்முன் தேடி அறிய முடியும். செய்து பார்ப்போமே. அறிந்து கொள்வோமே.

மகாபாரதம் இதனை வேத வியாசர் தொடர்ந்து கூற பகவான் கணபதி (பிள்ளையார்) தொடர்ந்து எழுதினாராம். இதில் வேத வியாசரோ, பிள்ளை யாரோ சின்ன இடைவெளி கூட எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் வேத வியாசரின் கடின சுலோ கங்களை எளிமைப்படுத்தி எழுத பிள்ளை யாருக்கு சற்று கூடுதல் நேரம் ஏற்பட்டது என்பர்.

நாம் கீதை என்றாலே 'பகவத் கீதை' என்பதனைத்தான் முதலில் ஞாபகத்தில் கொள்வோம். ஆனால் சிவ கீதை, அஷ்டவக்ர கீதை என சுமார் 10 கீதோபதேசங்கள் இருக்கின்றன.

* மகாபாரதத்தில் விதுரர் மிக நேர்மையானவர். விதுரநீதி என்றே சொல்வார்கள். இந்த விதுரரை எமதர்மராஜாவின் அவதாரமாக குறிப்பிடுகின்றனர்.

* துரியோதனன் பிறந்த போது அவனது அழுகை கழுதையின் கத்தல் போல் இருந்ததாம். பறவைகள், காகங்கள் பயந்து அங்கும், இங்கும் ஓடினவாம். பல அபசகுன நிமித்தங்கள் தோன்றின. விதுரர் துரியோ தனனை அழித்து விடும்படி திருதிராஷ்டி ரரிடம் கூறினார். துரியோதனனால் வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு விளையும் என்றார். ஆனால் திருதிராஷ்டிரர் தன் மகன் மீது கொண்ட பாசத்தி னால் அவ்வாறு செய்யவில்லை.

* மகாபாரதத்தின் மைய கருத்தே 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதுதான்.

* மகாபாரதம் சொல்லும் பாடம் 'நியாய மானதற்கும், சரியானதற்கும், முறையான திற்கும் மட்டுமே உடன் இருக்க வேண்டும்.

* ராமாயணத்தில் விஷ்ணு பகவான் ராமராக அவதரிக்கின்றார். மகாபாரதத்தில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரிக் கின்றார்.

* இரண்டிலும் பரசு ராமன் உள்ளார்.

* பரசுராமர், ராமர், கிருஷ்ணர் இந்த மூன்றி லும் மகா விஷ்ணு மனித அவதா ரம் எடுத்துள்ளார்.

ராமாயணத்தினை முதன் முதலில் ஆதி ராமாயணம் என சிவ பிரான் சக்திக்கு கூறி உள்ளார் எனப்படு கின்றது. அதனைக் கேட்ட காகம் கபுசந்தி யின் மூலம் பரவியது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவைகளை நம்ப வேண்டும் என்று அவசி யம் கிடையாது. அறியலாம் அல்லது அவரவர் விருப்பப்பட்ட நிரூபிக்கப்பட்ட நூல் களை படிக்கலாம். அவரவர் விருப்பத்தினைப் பொறுத்ததே. பொதுவில் ஆன்மீக புத்தகங்கள் அனைத்துமே (மதசார் பற்று) மனிதனின் பட படப்பினை குறைக்கும். மனித நேயத்தினைக் கூட்டும். இயற்கையோடு இணைந்து வாழச் செய்யும். இது ஒருவருக்கு கிடைக்கும் பெரிய பரிசு ஆகும்.

Tags:    

Similar News