செய்திகள் (Tamil News)

விருதுநகரில் கவர்னருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற 4 எம்.எல்.ஏ.க்கள்- 500 பேர் கைது

Published On 2018-05-11 09:00 GMT   |   Update On 2018-05-11 09:00 GMT
விருதுநகரில் கவர்னருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற 4 எம். எல்.ஏ.க் கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. #TNGovernor #Banwarilalpurohit
விருதுநகர்:

தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் இன்று விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இதற்காக இன்று காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் விருதுநகருக்கு புறப்பட்டார்.

வழியில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற கவர்னர் அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கோவில் இணை ஆணையர் ஜெகநாதன், உதவி ஆணையாளர் அரிகரன், டி.எஸ்.பி. ராஜா மற்றும் பிரமுகர்கள் வரவேற்றனர்.

சாமி தரிசனம் செய்த கவர்னர் விருதுநகருக்கு சென்றார்.

முன்னதாக கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி விருதுநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இன்று காலை கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தங்கப் பாண்டியன், சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் காதர் மொகைதீன் மற்றும் ம.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் விருதுநகர் பைபாஸ் சாலை சந்திப்பில் திரண்டனர்.

அவர்கள் கவர்னருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.


இதையடுத்து முன்னெச்சரிக்கையாக 4 எம். எல்.ஏ.க் கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

விருதுநகர் சென்ற கவர்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மனுக்களை பெற்றார். அதன்பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று பிற்பகல் 3 மணியளவில் விருதுநகர் தேசபந்து திடலில் தூய்மை பாரத திட்ட உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து அங்கு உணவு பாதுகாப்பு குறித்த கண்காட்சியை பார்வையிடுகிறார். அதன் தொடர்ச்சியாக விருதுநகர் -அழகாபுரி ரோட்டில் சந்திரகிரிபுரம் கிராமத்துக்கு சென்று தூய்மை பாரத திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார். #TNGovernor #Banwarilalpurohit
Tags:    

Similar News