செய்திகள் (Tamil News)

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி வழக்கு

Published On 2018-10-01 09:39 GMT   |   Update On 2018-10-01 09:39 GMT
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #TNMinister #SPVelumani
சென்னை:

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில், ‘கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை கோவை மாநகராட்சியில் டெண்டர்கள் ஒதுக்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய உறவினர் செந்தில்நாதன் நிறுவனத்துக்கு மட்டும் பெரும்பாலான ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ. 350 கோடி வரை மாநகராட்சியில் ஊழல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கடந்த செப்டம்பர் 10-ந்தேதி லஞ்ச ஓழிப்புத்துறை இயக்குனரிடம், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் செய்தார். அந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட கோரி ஆர்.எஸ்.பாரதி வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #TNMinister #SPVelumani
Tags:    

Similar News