செய்திகள் (Tamil News)

பல ஆண்களுடன் தொடர்பு வைத்ததால் கொன்றேன்- பெண் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம்

Published On 2018-10-31 12:14 GMT   |   Update On 2018-10-31 12:14 GMT
முதல் திருமணத்தை மறைத்து பல ஆண்களுடன் தொடர்பு வைத்ததால் கோத்தகிரி பெண்ணை கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி (25). இவர்களுக்கு கார்த்திகேயன் (4) என்ற மகன் உள்ளான். லோகேஸ்வரி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இவர் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மகன் கார்த்திகேயன் கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது.

அவன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். லோகேஸ்வரியை கொன்ற கொலையாளியை பிடிக்க குன்னூர் டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த திருமூர்த்தி மகன் கவுரி சங்கரை (27) பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் லோகேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர். கைதான கவுரி சங்கர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

நான் ஈரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எண்ணை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். மேலும் பகுதி நேர வேலையாக தனியார் நிறுவனத்தின் உடல் எடையை குறைக்கும் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தேன்.

இந்த நிறுவனம் மாதந் தோறும் ஈரோட்டில் விற்பனையாளர் கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் லோகேஸ்வரியும் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னிமலை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். பின்னர் நான் அடிக்கடி கோத்தகிரி வந்து லோகேஸ்வரியுடன் தங்கி வந்தேன். அப்போது தான் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

மேலும் லோகேஸ்வரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்தது. கடந்த 27-ந் தேதி மாலை 5 மணிக்கு கோத்தகிரி வந்தேன்.

லோகேஸ்வரியிடம் இது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் நான் கட்டிய தாலியை கழற்றி வீசினார். இதனால் கோபம் அடைந்த நான் வீட்டில் இருந்த கத்திரிகோலால் லோகேஸ்வரி கழுத்தில் குத்தினேன்.

இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரது கழுத்தை அறுத்தேன். இதில் இறந்து விட்டார். அப்போது அவரது மகன் அங்கு நின்றான். அவன் வெளியில் யாரிடமும் சொல்லி விடுவான் என்ற பயத்தில் அவனது கழுத்தையும் அறுத்தேன்.

பின்னர் லோகேஸ்வரி கழற்றி வீசிய தாலியை எடுத்து கொண்டு திருப்பூர் வந்தேன். அங்குள்ள அடகு கடையில் அதனை அடகு வைத்து பணம் பெற்று ஈரோட்டுக்கு சென்றேன்.

பின்னர் நான் பயன்படுத்திய செல்போன் சிம் கார்டை கழற்றி வைத்து விட்டேன். ஆனாலும் போலீசார் எனது செல்போன் எண்ணை வைத்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

கைதான கவுரி சங்கரை திருப்பூர் அழைத்து சென்ற போலீசார் அவர் அடகு வைத்த நகையை மீட்டனர். பின்னர் அவரை கோத்தகிரி அழைத்து வந்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து கவுரி சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலையாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News