செய்திகள்

களக்காட்டில் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு- பாலங்கள் மூழ்கின

Published On 2018-11-03 05:36 GMT   |   Update On 2018-11-03 05:36 GMT
களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய இடி- மின்னலுடன் கனமழை பெய்ததால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. #heavyrain #flood #northeastmonsoon
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய இடி- மின்னலுடன் கனமழை கொட்டியது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை பெய்தது.

இதையடுத்து களக்காட்டில் ஓடும் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய் ஆகிய ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இன்று அதிகாலை முதல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நாங்குநேரியான் கால்வாயில் உள்ள மூங்கிலடி, சிதம்பரபுரம், குடில்தெரு, கருவேலங்குளம் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

களக்காட்டில் ஏற்கனவே பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் களக்காடு-நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் சிதம்பரபுரம் வழியாகவே சென்று வந்தன. இந்நிலையில் சிதம்பரபுரம் செல்லும் பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் களக்காடு-நாகர்கோவில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து சிதம்பரபுரம், மூங்கிலடி, மஞ்சுவிளை, கீழப்பத்தை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தவிப்பு அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை நீடித்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளதால் பல்வேறு இடங்களில் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளை நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது. களக்காடு பேரூராட்சி நிர்வாகத்தினர் ஜே.சி.பி மூலம் வெள்ளத்தை வடிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல களக்காடு தலையணையிலும் காட்டாற்று வெள்ளம் கரை புரள்வதால் அங்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

திருக்குறுங்குடி, திருமலைநம்பி கோவில் செல்லும் வழியில் உள்ள நம்பியாற்று பாலமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். களக்காடு அருகே கீழவடகரையின் பச்சையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்தது. #heavyrain #flood #northeastmonsoon 
Tags:    

Similar News