கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை
- கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஊட்டி அருகே அத்திக்கல், புது தோட்டம், மஞ்சனக்கொரை, எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தாவரவியல் பூங்கா அருகே ராஜ்பவன் மாளிகை சாலையிலும் மரம் விழுந்தது.
கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இருவயல் கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரியில் கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு ஆங்காங்கே மின் வினியோகமும் தடைபட்டது. குறிப்பாக கூடலூர், பந்தலூரில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தாலுகா பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.