மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது- நீர்வரத்து 28,856 கன அடியாக அதிகரிப்பு
- அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 390 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 90.01 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.
அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரத்து 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 914 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதே போல் கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு இன்று வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 792 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் மேல் இருந்தது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து உபரி நீரும் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 33 ஆயிரத்து 849 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 33 ஆயிரத்து 40 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக உயர்ந்து காணப்பட்டது. இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 90 அடியை தொட்டுவிடும் என கூறப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டி உயர்ந்துள்ளது.
390 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 90.01 அடியாக உயர்ந்துள்ளது.
அதன்மூலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 28,856 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்த வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மேட்டூர் அணையை நீர் வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.