தமிழ்நாடு (Tamil Nadu)

மதுரை, சிவகங்கை வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம்

Published On 2024-04-09 03:58 GMT   |   Update On 2024-04-09 03:58 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக தேனிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மதுரை:

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கடந்த சில நாட்களாக தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இடையிடையே பிரசாரத்தின்போது, பொதுமக்களை நடந்து சென்று சந்திப்பது, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்பது, நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில் மதுரை , சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் இன்று மாலை பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

இதற்காக மதுரையில் வண்டியூர் அருகே சுற்றுச் சாலையில் கலைஞர் திடலில் லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது . இங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார்.

விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கோ.தளபதி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட முக்கிய தி.மு.க. பிரமுகர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலமாக புறப்பட்டு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் கலைஞர் திடலுக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார்.

அங்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக தேனிக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தேனி அருகே லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகே அமைந்துள்ள தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் தொகுதிகளிலிருந்து பிரசார கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் வசதிக்காக வாகனங்களை நிறுத்தவும் வந்து செல்லவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News