தமிழ்நாடு (Tamil Nadu)

கோடை மழையால் 329 ஹெக்டேர் நெல்,சிறுதானிய பயிர்கள் பாதிப்பு

Published On 2024-05-28 04:07 GMT   |   Update On 2024-05-28 04:07 GMT
  • பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் எதிர்பாராத கோடை மழை பயிர்களை சேதப்படுத்தின.
  • அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நவரை பருவத்தில் பெரும்பாலான விவசாயிகள் பம்பு செட் மூலம் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி இந்த நவரை பருவத்தில் 4850 ஹெக்டேர் பரப்பளவில் நெல், எள் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்திருந்தனர்.

இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் எதிர்பாராத கோடை மழை பயிர்களை சேதப்படுத்தின. அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பில் உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளது.

முதல் கட்ட கணக்கெடுப்பின்படி லால்குடியில் 209 ஹெக்டேர், வையம்பட்டியில் 0.40 ஹெக்டேர் சிறுதானியம் மற்றும் நெற்பயிர்கள், மணப்பாறையில் 40 ஹெக்டேர், மருங்காபுரியில் 15. 87, தா.பேட்டையில் 45, வையம்பட்டியில் 15, மணிகண்டத்தில் 4 ஹெக்டேர் என மொத்தம் 329.27 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டு 505 விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த விபரங்களை வேளாண்துறை அதிகாரிகள் கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்த கணக்கெடுப்புகளை மீண்டும் வருவாய்த் துறையினர் மதிப்பீடு செய்து தமிழக அரசுக்கு அது குறித்த விவரங்களை அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News