தமிழ்நாடு (Tamil Nadu)

செல்போன் பேசியபடி காரை ஓட்டியதாக வழக்கு: பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது

Published On 2024-05-30 00:45 GMT   |   Update On 2024-05-30 00:45 GMT
  • டிடிஎப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.
  • அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்து வருகிறார்.

மதுரை:

பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் படுத்துக்கிடந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பின், டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு ரத்துசெய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டிச்சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்துவிட்டேன் என ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்தும் வருகிறார்.

இந்நிலையில், பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவுசெய்து யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் டி.டி.எப். வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News